ஒடிசாவில் இருந்து பெருந்துறைக்கு கள்ளக்காதலனுடன் ஓடிவந்த பெண்ணை கணவருடன் சேர்த்து வைத்த போலீசார்
ஒடிசாவில் இருந்து பெருந்துறைக்கு கள்ளக்காதலனுடன் ஓடிவந்த பெண்ணை போலீசார் கணவருடன் சேர்த்து வைத்தனர்.;
பெருந்துறை,
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டம் டம்ளபராவை சேர்ந்தவர் பிட்டோ சமந்தகுமார் (வயது 30). இவருக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.
இவர் கடந்த சில ஆண்டுகளாக பெருந்துறை காசிபுள்ளாம்பாளையத்தில் தங்கி சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் சில நாட்களுக்கு முன் சொந்த ஊரான டம்ளபராவுக்கு சென்றார். அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுமந்தாபாரிக் என்பவருடைய மனைவி பிரமோதாபாரிக் (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
போலீசில் புகார்
இதைத்தொடர்ந்து பிரமோதாபாரிக் தன்னுடைய குழந் தையை தூக்கிக்கொண்டு கள்ளக் காதலன் பிட்டோ சமந்தகுமாருடன் காசிப்புள்ளாம்பாளையத்துக்கு ஓடி வந்துவிட்டார். அங்கு இருவரும் குடும்பம் நடத்தி வந்தார்கள். இதற்கிடையே சுமந்தாபாரிக் தன்னுடைய மனைவியை பிட்டோ சமந்தகுமார் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டதாகவும், மனைவியையும்-குழந்தையையும் மீட்டு தரவேண்டும் என்று சம்பல்பூர் போலீசில் புகார் அளித்தார்.
மீட்டார்கள்...
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிட்டோசமந்தகுமாரை தேடி பெருந்துறை காசிபுள்ளாம்பாளையத்துக்கு வந்தார்கள். சம்பல்பூர் போலீசார் தன்னை தேடி வருவதை தெரிந்துகொண்ட பிட்டோ சமந்தகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன்பின்னர் காசிபுள்ளாம்பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த பிரமோதாபாரிக்கையும், அவருடைய குழந்தையையும் போலீசார் மீட்டார்கள். பிறகு அறிவுரை கூறி கணவர் சுமந்தாபாரிக்கிடம் ஒப்படைத்தார்கள். பின்னர் சுமந்தபாரிக்கையும், அவருடைய மனைவி பிரமோதாபாரிக்கையும் அழைத்துக்கொண்டு போலீசார் ஒடிசா புறப்பட்டார்கள். இந்த வழக்கில் சம்பல்பூர் போலீசாருக்கு பெருந்துறை போலீசார் உதவி புரிந்தார்கள்.