மின்சாரம் தாக்கி விவசாயி பலி மற்றொரு சம்பவத்தில் மின்வாரிய ஊழியர் சாவு

வாணியம்பாடி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலியானார். மற்றொரு சம்பவத்தில் மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி இறந்தார்.

Update: 2017-12-22 22:45 GMT
வாணியம்பாடி,

வாணியம்பாடி அருகே உள்ள அலசந்தாபுரத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 60). விவசாயி. வயலில் ஏர் உழுவதற்காக இவர் நேற்று காலை வயலுக்கு சென்று கொண்டிருந்தார். அங்கு மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்து கிடந்தது. இதனை கவனிக்காமல் ராஜா அதனை மிதித்தவாறு செல்ல முயன்றார்.

அப்போது அந்த வயரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்ததால், ராஜா மீது மின்சாரம் தாக்கியதில் தூக்கி எறியப்பட்டார். சற்று நேரத்தில் அவர் அதே இடத்தில் இறந்து விட்டார். இது குறித்து திம்மாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தத்தை அடுத்த ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முரளிதரன். கூலி தொழிலாளி. இவரது மகன் இமயவரம்பன் (23), குடியாத்தத்தில் உள்ள மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலைபார்த்து வந்தார். ராமாலை கொல்லிமேடு பகுதியில் தனியார் நிலத்தில் இருந்த மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டிருந்தது.

நேற்று காலை மின்கம்பம் மீது ஏறிய இமயவரம்பன் பழுதை சரி செய்ய முயன்றார். அப்போது அதில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் தாக்கியதில் இமயவரம்பன் கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்தபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, மேகநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்