சாகசங்கள் நிறைந்த ஜம்போ சர்க்கஸ் சென்னையில் தொடங்கியது

பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் சாகசங்கள் நிறைந்த ‘ஜம்போ சர்க்கஸ்’ சென்னையில் தொடங்கியது.

Update: 2017-12-22 23:45 GMT
சென்னை,

‘ஜம்போ சர்க்கஸ்’ ஒருங்கிணைப்பாளர் ஷாஜி லால் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தரமான கேளிக்கைகளை அளித்து வருவதன் அடிப்படையில் ‘ஜம்போ சர்க்கஸ்’ இந்திய மக்களிடையே ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு 2 வருடங்களுக்கு பின்னர் ‘ஜம்போ சர்க்கஸ்’ சாகச நிகழ்ச்சிகள் சென்னையில் தொடங்கியுள்ளது.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே இதற்காக பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு மதியம் 1 மணி, மாலை 4 மணி மற்றும் 7 மணி ஆகிய 3 வேளைகளில் காட்சிகள் நடைபெறும். காட்சிகளுக்கு முன்பதிவு செய்யலாம். வருகிற பிப்ரவரி மாதம் 20-ந்தேதி வரையிலும் சர்க்கஸ் காட்சிகள் நடைபெறும்.

சாகசங்கள்

தன்சானியா, எத்தியோப்பியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 10 கலைஞர்கள், மணிப்பூர், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 90 இந்திய கலைஞர்கள் சாகசத்தில் ஈடுபடுகின்றனர். தான்சானியா நாட்டு கலைஞர்கள் நிகழ்த்தும் யோகா அக்ரோபாட்டிக்ஸ், கம்பங்களில் ஏறி ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு தாவும் சாகசம் வியக்க வைப்பதாக அமையும்.

இதேபோல ஸ்டிக் பேலன்ஸ், செங்குத்தாக ஊஞ்சலாடும் அக்ரோபாட், ரோப் பேலன்ஸ், குதிரை சவாரி, 3 பேர் மோட்டார் சைக்கிளில் இருட்டில் செல்லும் ‘குளோப் ஆப் டெத்’, ஜெர்மன் வீல் ஆக்ட், லூஸ்வையர் டிரிங்கிங் போன்ற சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தி இருக்கையின் நுனியில் அமர வைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்