மக்களிடையே மத உணர்வுகளை தூண்டிவிட்டு பா.ஜனதாவினர் பிரித்தாளும் கொள்கையில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள்
மக்களிடையே மத உணர்வுகளை தூண்டிவிட்டு பா.ஜனதாவினர் பிரித்தாளும் கொள்கையில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள் என்று பரமேஸ்வர் கூறினார்.
கோலார் தங்கவயல்,
மக்களிடையே மத உணர்வுகளை தூண்டிவிட்டு பா.ஜனதாவினர் பிரித்தாளும் கொள்கையில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள் என்று பரமேஸ்வர் கூறினார்.
2–வது நாள் தேர்தல் சுற்றுப்பயணம்கோலார் மாவட்டத்தில் நேற்று 2–வது நாளாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சுற்றுப்பயணம் நடந்தது. இதில், கோலார் டவுனில் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில், மந்திரிகள் டி.கே.சிவக்குமார், ரமேஷ்குமார், எச்.எம்.ரேவண்ணா, ரோஷன் பெய்க் மற்றும் கே.எச்.முனியப்பா எம்.பி., எஸ்.ஆர்.பட்டீல் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பரமேஸ்வர் பேசியதாவது:–
மத அரசியல்திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வீரர். அவரை கவுரவப்படுத்தும் நோக்கத்தில் தான் மாநில அரசு திப்பு ஜெயந்தியை கொண்டாடி வருகிறது. ஆனால் உப்பள்ளியில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் உத்தரபிரதேச முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத், திப்பு ஜெயந்தியை கொண்டாடும் காங்கிரஸ் அரசு, அனுமன் ஜெயந்தியை ஏன் கொண்டாடவில்லை என்று கேட்டுள்ளார். மக்களிடையே மத உணர்வுகளை தூண்டிவிட்டு, பா.ஜனதா கட்சி பிரித்தாளும் கொள்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருவது தெரியவருகிறது. பா.ஜனதாவினர் திப்பு சுல்தானின் வரலாறை படிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியினரும் ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர். முல்பாகலில் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியபோது கூட நான், ஆஞ்சநேயரை வழிபட்டேன்.
பா.ஜனதாவினர் மட்டும் இந்து மதத்தை குத்தகைக்கு எடுத்தது போல செயல்பட்டு வருகிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு அனைத்து மதத்தின் மீதும் நம்பிக்கை உள்ளது. பா.ஜனதாவினர் இத்தகைய பேச்சுகள் மூலம் மக்களை திசை திருப்பி மத அரசியல் செய்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து கோலார் மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்கிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளது. இதனால் தொண்டர்கள் எந்தவித கோஷ்டி மோதலிலும் ஈடுபடாமல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். கோலார் மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கே.எச்.முனியப்பா எம்.பி. பேசுகையில், கட்சிக்கு ஒரு மணி நேரம் கூட உழைக்காதவர்கள், திடீரென்று கட்சிக்குள் வந்து கோஷ்டி பூசலை ஏற்படுத்துகிறார்கள். இதனை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. தொண்டர்களுக்கும், கட்சிக்கும் யார் திடீரென்று வருபவர்கள் என்பது தெரியும். கட்சி மேலிடம் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், அவர்களின் வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம் என்றார். முன்னதாக அனைவரையும் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சந்திரா ரெட்டி வரவேற்று பேசினார்.
போலீஸ் தடியடிகோலாரில் பொதுக்கூட்டம் முடிந்தபிறகு பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்கள் காரில் மாலூருக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள் மாலூர் சர்க்கிள் பகுதியில் வந்தபோது, பரமேஸ்வருக்கு யார் மாலை அணிவித்து வரவேற்பது என்று நஞ்சேகவுடாவின் ஆதரவாளர்களுக்கும், சீனிவாசின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை அங்கிருந்து கலைத்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பரமேஸ்வர், நஞ்சேகவுடாவையும், சீனிவாசையும் மேடைக்கு அழைத்து அமர வைத்துக்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அனைவரும் காங்கிரஸ் வெற்றிக்கு ஒற்றுமையாக இருந்து பாடுபட வேண்டும் என்று கூறினார்.