விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர்களின் உடல்களுக்கு டி.ஐ.ஜி. அஞ்சலி
லாரி மோதிய விபத்தில் உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், புவனேஸ்வரி ஆகியோர் உடல்களுக்கு டி.ஐ.ஜி. அஞ்சலி செலுத்தினார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் பாலூர் அருகே உள்ள பழைய சீவரம் பகுதியில் லாரி மோதிய விபத்தில் காஞ்சீபுரத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், புவனேஸ்வரி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களது உடல்களை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசனின் உடல் காஞ்சீபுரம் கோட்ராம்பாளையம் தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரியின் உடல் காஞ்சீபுரம் ஓரிக்கையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த துயர செய்தி கேள்விப்பட்டதும், காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சப்-இன்ஸ்பெக்டர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.