ஊட்டி, குன்னூர் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு

ஊட்டி, குன்னூர் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

Update: 2017-12-21 21:50 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி, குன்னூர் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கக்குச்சி ஊராட்சி மதுரைவீரன் காலனி பகுதியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பில் நடந்து வரும் நடைபாதை மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி, ஒன்னத்தலை பகுதியில் ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் செலவில் கால்வாய் அமைக்கும் பணி, கூக்கல் ஊராட்சி கூக்கல்தொரை முதல் கம்பட்டி வரை ரூ.27 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் சாலை சீரமைப்பு பணி, தொட்டண்ணி சமுதாயக்கூடத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் நடைபாதை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

குன்னூர் நகராட்சி சார்பில் ரூ.26½ லட்சம் மதிப்பில் கியாஸ் குடோன் பகுதியில் சாலை சீரமைப்பு பணி, அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.39¾ லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி, ஆப்பிள் பீ பகுதியில் இருந்து வண்ணாரப்பேட்டை வரை ரூ.18 லட்சம் மதிப்பில் நடந்து வரும் குறுக்கு சாலை சீரமைப்பு பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற் கொண்டார்.

இந்த வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா குன்னூர் லாலி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ அறை, குழந்தைகள் பிரிவு, பொது பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவை ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சை, குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வில் போது குன்னூர் ஆர்.டி.ஓ. கீதாபிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முருகேசன், செயற்பொறியாளர் பசுபதி உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்