ரூ.2 லட்சம் நவரத்தின கற்களுடன் மாயமான ஆட்டோ டிரைவர் கைது

கோவையில் பெங்களூருவை சேர்ந்த நகை வியாபாரி தவறவிட்ட ரூ.2 லட்சம் நவரத்தின கற்களுடன் மாயமான ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2017-12-22 00:30 GMT
கோவை,

கோவையில் நகைப்பட்டறை, நகைக்கடைகள் அதிகம் இருப்பதால், இங்கு நகை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான நகை வியாபாரிகள் வருவது உண்டு. அதன்படி பெங்களூரு சாந்திநகரை சேர்ந்த பட்டேல் (வயது 30) கடந்த 7-ந் தேதி பெங்களூருவில் இருந்து பஸ் மூலம் கோவை ஆம்னி பஸ்நிலையத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து ஆட்டோ மூலம் ராஜ வீதியில் உள்ள ஒரு விடுதிக்கு சென்றார்.

அவர் ஆட்டோவில் ஏறும்போது 2 பைகளை வைத்து இருந்தார். ஆனால் இறங்கும்போது மறந்து ஆட்டோவிலேயே ஒரு பையை வைத்துவிட்டு இறங்கிவிட்டார். விடுதிக்கு சென்ற பிறகுதான், அவருக்கு ஒரு பையை தவறவிட்டது நினைவு வந்தது. அந்த பைக்குள் முத்து மற்றும் நவரத்தின கற்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

உடனே அவர் விடுதியைவிட்டு வெளியே வந்து அங்குள்ள ஆட்டோ நிறுத்தும் இடத்திலும், ஆம்னி பஸ்நிலையம் அருகே சென்றும் விசாரித்தார். ஆனால் அவர் சென்ற ஆட்டோ குறித்தும், தவறவிட்ட பை குறித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் பெரியக்கடை வீதி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கோவை ராஜவீதியில் உள்ள நகைக்கடைக்கு சென்ற ஒருவர் அங்கு முத்து மற்றும் நவரத்தின கற்களை விற்க முயன்றார். அவர் மீது சந்தேகம் அடைந்த நகைக்கடை ஊழியர்கள் இதுகுறித்து பெரியக்கடைவீதி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் அவர், கோவை உருமாண்டம்பாளையத்தை சேர்ந்த சத்தார் (31) என்பதும் ஆட்டோ ஓட்டி வருவதும் தெரியவந்தது. மேலும் கடந்த 7-ந் தேதி பட்டேல் விட்டுச்சென்ற பையை சத்தார் எடுத்து திறந்து பார்த்தபோது, அதற்குள் முத்து மற்றும் நவரத்தின கற்கள் இருந்ததால், அவை லட்சக்கணக்கான மதிப்பு இருக்கும் என்று நினைத்து அவரிடம் கொடுக் காமல், விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சத்தாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான முத்து மற்றும் நவரத்தின கற்கள் மீட்கப்பட்டன.

மேலும் செய்திகள்