தோசை கரண்டியால் சூடு வைத்ததாக புகார்: கோர்ட்டில் ஆஜராக வந்த நீதிபதியின் தாயார்
தோசை கரண்டியால் சூடு வைத்ததாக கூறப்பட்ட புகார் தொடர்பாக நீதிபதியின் தாயார் கோர்ட்டில் ஆஜராக வந்தார்.
திருச்சி,
திருச்சி கோர்ட்டில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருபவர் நிர்மலா. இவர் ஒரு நீதிபதியின் வீட்டில் சமையல் செய்த போது நீதிபதியின் தாயார் தோசை கரண்டியால் சூடு வைத்ததாக புகார் கூறப்பட்டது. சூடு வைத்த நீதிபதியின் தாயார் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி நீதித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி எஸ். குமரகுரு விசாரணை நடத்துவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக நீதிபதியின் தாயார் விமலா பாய் (வயது83) நேற்று கோர்ட்டுக்கு வந்தார். ஆனால் முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி நேற்று வேறு பணி காரணமாக சென்று விட்டதால் விமலா பாயிடம் விசாரணை நடைபெறவில்லை.
கோர்ட்டு வளாகத்தில் விமலா பாய் நிருபர்களிடம் கூறுகையில் ‘என் மீது கூறப்பட்டு இருப்பது பொய் புகார். அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. வயது முதிர்ந்த என்னால் உதவியாளர்களின் துணை இல்லாமல் நடக்க கூட முடியாது. நான் யாருக்கும் சூடு வைக்க வில்லை. ஓய்வு பெற்ற ஆசிரியையான நான் இதுபோன்று மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்தது இல்லை’ என்றார்.