தலித் மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கு: சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவு சித்தராமையா அறிவிப்பு

தலித் மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கை சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக முதல்–மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

Update: 2017-12-21 21:30 GMT

பெங்களூரு,

தலித் மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கை சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக முதல்–மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

மாணவி கற்பழித்து கொலை

விஜயாப்புரா புறநகர் ஆதர்ஷ்நகரை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு 16 வயதில் மகள் உள்ளாள். தலித் வகுப்பை சேர்ந்தவள். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தாள். கடந்த 19–ந் தேதி பள்ளிக்கு நடந்து சென்ற மாணவியை கடத்திய மர்மநபர்கள் அவரை கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை செய்தனர். இதுகுறித்து ஆதர்ஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பயங்கர சம்பவத்தை கண்டித்து நேற்று முன்தினம் விஜயாப்புராவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. முதல்–மந்திரி சித்தராமையா, நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் ஆகியோர் மாணவியின் வீட்டுக்கு சென்று அவளுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். மேலும், குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.

போராட்டம்

இருந்தாலும், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் இரவும் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறினார்கள். இந்த போராட்டம் நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது.

தலித் மாணவியின் சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக்கூறி பல்வேறு அமைப்பினர், மாணவ–மாணவியர் நேற்று விஜயாப்புரா மாவட்டத்தில் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யாவிட்டால் நாளை (சனிக்கிழமை) விஜயாப்புரா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.

சி.ஐ.டி. விசாரணை

இதற்கிடையே, மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கை சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக முதல்–மந்திரி சித்தராமையா அறிவித்தார். இதனால் விரைவில் இந்த வழக்கில் சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர். இந்நிலையில், வழக்கு சம்பந்தமாக சந்தேகத்தின் அடிப்படையில் ஆதர்ஷ்நகர் போலீசார் 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்