அரசு, தனியார் பஸ்களில் அதிக சத்தத்தை எழுப்பும் ஒலி பெருக்கிகள் பறிமுதல்
அரசு, தனியார் பஸ்களில் அதிக சத்தத்தை எழுப்பும் ஒலி பெருக்கிகள் பறிமுதல்
குளித்தலை,
குளித்தலை வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் குளித்தலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைராஜ் மற்றும் போலீசார் அரசு மற்றும் தனியார் பஸ்களில் குழாய்வடிவ ஒலி பெருக்கி (ஏர்ஹாரன்) பொருத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து நேற்று காலை திடீர் ஆய்வு செய்தனர். குளித்தலை பஸ் நிலையப்பகுதியில் நடைபெற்ற இந்த ஆய்வில் குளித்தலை பஸ்நிலையம் வழியாக சென்ற 26 அரசு மற்றும் தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக அளவில் சத்தத்தை எழுப்பும் குழாய் வடிவிலான ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் குழாய் வடிவிலான ஒலி பெருக்கிகளை பயன்படுத்த கூடாது. ஒலி எழுப்ப முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் குழாய் வடிவிலான ஒலி பெருக்கிகளை பயன்படுத்தி ஒலி எழுப்பக்கூடாது. அடிக்கடி இதுபோன்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். எனவே தொடர்ந்து பஸ்களில் இவ்வகையான ஒலிபெருக்கிகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என பஸ் டிரைவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் உரிய வழித்தடத்தில் செல்லாத 2 மின் பஸ் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.