மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து அறிவிப்பு வெளியிட எடியூரப்பா யார்? முதல்–மந்திரி சித்தராமையா கேள்வி

மக்களை திசை திருப்ப பா.ஜனதா அரசியல் நாடகமாடவதாகவும், மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து அறிவிப்பு வெளியிட எடியூரப்பா யார்? என்றும் முதல்–மந்திரி சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.;

Update: 2017-12-21 22:00 GMT

பெங்களூரு,

மக்களை திசை திருப்ப பா.ஜனதா அரசியல் நாடகமாடவதாகவும், மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து அறிவிப்பு வெளியிட எடியூரப்பா யார்? என்றும் முதல்–மந்திரி சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜயாப்புராவில் நேற்று முதல்–மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கடிதம் எழுதவில்லை

மகதாயி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையை தீர்க்க எனது தலைமையிலான அரசு எல்லா விதமான நடவடிக்கையும் எடுத்து வருகிறது. ஆனால் கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், தற்போது மகதாயி நதிநீர் பிரச்சினையை பா.ஜனதாவினர் கையில் எடுத்து அரசியல் செய்து வருகிறார்கள். மகதாயி நதியில் இருந்து மல்லபிரபா நதிக்கு 7.56 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரை திறந்து விடுவோம் என்று கோவா மாநில முதல்–மந்திரி மனோகர் பாரிக்கர், கர்நாடக அரசுக்கு கடிதம் எதுவும் எழுதி அனுப்பவில்லை.

மகதாயி நதிநீரை பங்கீட்டு கொள்வது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கோர்ட்டுக்கு வெளியே பேச்சு வார்த்தை மூலம் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதே கர்நாடக அரசின் விருப்பம். கோவா முதல்–மந்திரி மனோகர் பாரிக்கர், மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து கோர்ட்டில் பிரமாண பத்திரம் எதுவும் தாக்கல் செய்யவில்லை. அப்படி இருக்கும் போது மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து பா.ஜனதா தலைவர் எடியூரப்பா அறிவிப்பு வெளியிடுவது எப்படி சாத்தியமாகும்.

3 மாநில முதல்–மந்திரிகளை...

இந்த பிரச்சினைக்கு கோர்ட்டுக்கு வெளியே, பேச்சு வார்த்தை மூலம் பா.ஜனதாவினர் தீர்வுகண்டால், அதனை வரவேற்கிறேன். உப்பள்ளியில் நடைபெறும் மாநாட்டில் மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து அறிவிப்பு வெளியிடுவேன் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார். அவரது பேச்சை மக்கள் நம்ப மாட்டார்கள். மக்களை திசை திருப்ப பா.ஜனதா நினைக்கிறது. மகதாயி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று எடியூரப்பா நினைத்தால், அதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச வேண்டும்.

பின்னர் 3 மாநில முதல்–மந்திரிகளை அழைத்து பிரதமர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அப்போது தான் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். மகதாயி நதிநீர் பிரச்சினையை தீர்க்க கோவா முதல்–மந்திரியுடன் பேச்சு வார்த்தை நடத்த நான் தயாராக இருக்கிறேன். ஏற்கனவே பிரதமருக்கும், கோவா மற்றும் மராட்டிய முதல்–மந்திரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். அந்த சந்தர்ப்பத்தில் கோவா சட்டசபை தேர்தல் நடைபெற்றதால் பேச்சு வார்த்தை நடத்த முடியாமல் போனது.

எடியூரப்பா யார்?

அதே நேரத்தில் கோவா சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தவுடன், அந்தமாநில பா.ஜனதா தலைவர்களுடன் பேசுவதாக எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் கூறி இருந்தார்கள். இதுவரை அவர்கள் எந்த விதமான பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. தற்போது கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், கோவா முதல்–மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது போல பா.ஜனதாவினர் அரசயில் நாடகமாடுகிறார்கள். மகதாயி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை குறித்து அறிவிப்பு வெளியிட எடியூரப்பா யார்?.

மகதாயி நதிநீர் பிரச்சினையை கோர்ட்டுக்கு வெளியே தீர்த்துக்கொள்ள கர்நாடக அரசு தயாராக உள்ளது. எனவே 3 மாநில முதல்–மந்திரிகளையும் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதே நேரத்தில் கோவா முதல்–மந்திரி மனோகர் பாரிக்கர், மல்லபிரபா நதியில் 7.56 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்