காஞ்சீபுரம் அருகே லாரி மோதி 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் பலி

காஞ்சீபுரம் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உயிரிழந்தனர்.

Update: 2017-12-21 22:00 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 52). காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பபிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அதே அலுவலகத்தில் புவனேஸ்வரி (30) என்பவரும் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.

நேற்று இரவு இவர்கள் இருவரும் ஒரே மோட்டார்சைக்கிளில் பாலூர் அருகே உள்ள பழைய சீவரம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பழைய சீவரத்தில் இருந்து வந்த லாரி எதிர்பாராதவிதமாக இவர்கள் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

டிரைவர் தப்பி ஓட்டம்

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பாலூர் போலீசார் விரைந்து சென்று அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன், புவனேஸ்வரி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுதொடர்பாக பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

விபத்தில் பலியான புவனேஸ்வரிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லாரி மோதியதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் பலியானது போலீஸ் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்