அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதல்; 7 பேர் படுகாயம்

செம்பனார்கோவில் அருகே அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதி கொண்டன. இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2017-12-21 23:00 GMT
செம்பனார்கோவில்,

புதுச்சேரி மாநில அரசு பஸ் ஒன்று நேற்று மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதேபோல் தமிழக அரசு பஸ் ஒன்று சின்னங்குடியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்தது. செம்பனார்கோவில் அருகே ஆறுபாதி என்ற இடத்தில் சென்றபோது 2 அரசு பஸ்களும் நேருக்குநேர் மோதி கொண்டன. இந்த விபத்தில் தமிழக அரசு பஸ் டிரைவர் மயிலாடுதுறையை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (வயது 55), கண்டக்டர் மயிலாடுதுறை அருகே செண்பகச்சேரியை சேர்ந்த குமரன் (40), பஸ்சில் பயணம் செய்த கருவாழக்கரை கிராமத்தை சேர்ந்த அஞ்சம்மாள் (65), ஆறுபாதியை சேர்ந்த மோகன் (50), ஆக்கூரை சேர்ந்த மணவாளன் (40), பொறையாறை சேர்ந்த நவீன் (20), மன்னம்பந்தலை சேர்ந்த ராஜாராமன் (40) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

தப்பி ஓட்டம்

உடனே அவர்கள் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் தமிழக அரசு பஸ் நொறுங்கி உருக்குலைந்தது. புதுச்சேரி மாநில அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த விபத்தில் புதுச்சேரி மாநில அரசு பஸ்சில் பயணம் செய்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து செம்பனார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்