விருகம்பாக்கத்தில் கார் பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து 2 கார்கள் தீயில் கருகின
சென்னை விருகம்பாக்கத்தில் கார்களை பழுது பார்க்கும் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 கார்கள் தீயில் கருகின.
பூந்தமல்லி,
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் இக்பால்(வயது 45). இவர், அதே பகுதியில் சின்மயா நகர், ரெட்டி தெருவில் கார்களை பழுது பார்க்கும் கடை வைத்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் இரவு 11 மணியளவில் திடீரென கடையின் உள்ளே இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக கோயம்பேடு, அசோக் நகர், கீழ்ப்பாக்கம் ஆகிய 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் கடையில் எரிந்த தீயை போராடி அணைத்தனர். எனினும், கடையில் இருந்த 2 சொகுசு கார்கள் தீயில் எரிந்து நாசமாயின.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. எனினும் யாராவது வேண்டுமென்றே கடையில் தீ வைத்து நாசவேலையில் ஈடுபட்டனரா? என்ற கோணத்திலும் விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.