தனியார் பஸ் மோதி முதியவர் பலி; 28 பேர் படுகாயம் பொதுமக்கள் சாலைமறியல்

மதுக்கூர் அருகே தனியார் பஸ் மோதி முதியவர் பலியானார். இதில் 28 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-21 23:15 GMT
மதுக்கூர்,

மன்னார்குடி அருகே உள்ள திருமக்கோட்டை பெருமாள் கோவில் நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 60). இவர் சுந்தரக்கோட்டையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக மதுக்கூர் அருகே உள்ள ஆவிக்கோட்டை பஸ் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக ராஜமாணிக்கம் மீது மோதியது. பின்னர் பஸ் கட்டுபாட்டை இழந்து அருகில் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜமாணிக்கம் பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ்சில் பயணம் செய்த 28 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பட்டுக்கோட்டை மற்றும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பரவாக்கோட்டையை சேர்ந்த மேனகா (46), ரமணி (52), வீரக்குமார் (11), சரவணன் (5), சந்திரா (48), சாந்தி (7), சுமதி (30), மல்லிகா (35), திருவாரூர் கொட்டாரக்குடியை சேர்ந்த சவுந்தரராஜன் (65), அதங்குடியை சேர்ந்த சக்கரவர்த்தி (53), மன்னார்குடி செருமங்கலத்தை சேர்ந்த ஈஸ்வரி (43), மதுக்கூர் சிவக்கொல்லையை சேர்ந்த சந்திரசேகர் (65), மன்னார்குடியை சேர்ந்த சரவணன் (28) உள்பட 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலைமறியல்

மேற்கண்ட வழித்தடத்தில் விபத்தை ஏற்படுத்திய பஸ்சை இயக்கக்கூடாது என கூறி அப்பகுதி பொதுமக்கள் ஆவிக்கோட்டை பகுதியில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. கோவிந்தராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் அதிராம்பட்டினம் தியாகராஜன், பட்டுக்கோட்டை அன்பழகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்தபகுதியில் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்