ஓடையில் மணல் அள்ளுவதற்காக லோடு ஆட்டோவில் வந்தவர் அதன் சக்கரத்தில் சிக்கி பலி; மற்றொருவர் படுகாயம்

ஓடையில் மணல் அள்ளுவதற்காக லோடு ஆட்டோவில் வந்தவர் அதன் சக்கரத்தில் சிக்கி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2017-12-21 21:30 GMT

சாத்தான்குளம்,

ஓடையில் மணல் அள்ளுவதற்காக லோடு ஆட்டோவில் வந்தவர் அதன் சக்கரத்தில் சிக்கி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். போலீசாரை கண்டதும் கீழே குதித்து தப்பி ஓட முயன்ற போது இந்த விபத்து நடந்துள்ளது.

மணல் கடத்தல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ளது வேலவன்புதுக்குளம் கிராமம். இங்குள்ள ஒடையில் சிலர் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்தனர். இதுகுறித்து அப்பகுதியினர் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தனர். நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் சாத்தான்குளம் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் ஆழ்வார் தலைமையிலான போலீசார் வேலவன்புதுக்குளம்– கோமானேரி ரோட்டில் ரோந்து சென்றனர்.

அப்போது மேல சாத்தான்குளத்தைச் சேர்ந்த இறைச்சி கடைக்காரரான மணிகண்டனுக்கு சொந்தமான லோடு ஆட்டோவில் சிலர் வேலவன்புதுக்குளம் ஓடையில் மணல் அள்ள சென்றதாக கூறப்படுகிறது. அந்த லோடு ஆட்டோவை சாத்தான்குளம் ஆர்.சி.வடக்கு தெருவைச் சேர்ந்த செல்லத்துரை மகன் தர்மராஜ் (வயது 32) என்பவர் ஓட்டிச் சென்றார். லோடு ஆட்டோவின் பின்பகுதியில் வேலவன்புதுக்குளத்தைச் சேர்ந்த கணபதி மகன் அய்யப்பன் (30), பொன்பாண்டி (42) ஆகியோர் இருந்தனர்.

லோடு ஆட்டோ மோதியது

போலீசாரைக் கண்டதும் தர்மராஜ் லோடு ஆட்டோவை திருப்பி செல்ல முயன்றார். அப்போது லோடு ஆட்டோவின் பின்பகுதியில் இருந்த அய்யப்பன், பொன்பாண்டி ஆகிய 2 பேரும் தப்பி செல்வதற்காக கீழே குதித்தனர். இதனை கவனிக்காமல் லோடு ஆட்டோவை தர்மராஜ் திருப்பியதால் அய்யப்பன், பொன்பாண்டி ஆகிய இருவர் மீதும் லோடு ஆட்டோ மோதியது. அதன் சக்கரம் இருவர் மீதும் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கிய அய்யப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பொன்பாண்டியை போலீசார் சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரான தர்மராஜை கைது செய்து லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான லோடு ஆட்டோ உரிமையாளரான மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.

சாலைமறியல்

இதற்கிடையே விபத்தில் இறந்த அய்யப்பனின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். மணல் கடத்தலில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று காலையில் அய்யப்பனின் உறவினர்கள் மற்றும் வேலவன்புதுக்குளம் கிராம மக்கள் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரி அருகில் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சாத்தான்குளம்– இட்டமொழி மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாத்தான்குளத்தில் இருந்து நாகர்கோவில் சென்ற பஸ்கள் விஜயராமபுரம், சிறப்பூர், நடுவக்குறிச்சி, திசையன்விளை வழியாக திருப்பி விடப்பட்டன. இந்த போராட்டம் மாலை வரை நீடித்தது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

மாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாலச்சந்திரன் (சாத்தான்குளம்), சகாயஜோஸ் (ஸ்ரீவைகுண்டம்) மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இறந்த அய்யப்பனின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் உறுதி அளித்தார்.

இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு இறந்த அய்யப்பனின் உடலை வாங்கி சென்றனர். இதனால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் இறந்த அய்யப்பனுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். படுகாயம் அடைந்த பொன்பாண்டிக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்