திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் தீவிரம்

திண்டுக்கல்லில் 31-ந்தேதி நடைபெற இருக்கும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை கலெக்டர் டி.ஜி.வினய் நேரில் ஆய்வு செய்தார்.;

Update: 2017-12-21 22:30 GMT
திண்டுக்கல்,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில், மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே வருகிற 31-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற இருக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார்.

மேலும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட பல்வேறு துறை அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். இதற்காக விழா நடைபெறும் இடத்தை பொக்லைன் எந்திரம் கொண்டு சமப்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக நடந்தது. இதைத் தொடர்ந்து நூற்றாண்டு விழாவுக்கு பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை நேற்று கலெக்டர் டி.ஜி.வினய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். விழா பந்தல் அமைக்கும் பணி, முக்கிய பிரமுகர்கள் வரும் பாதை, அவர்களின் வாகனங்களை நிறுத்தும் இடம், பொதுமக்கள் அமரும் இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

அதேபோல் விழாவுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலுடன், கலெக்டர் ஆலோசனை நடத்தினார். மேலும் விழா நடைபெறும் இடத்துக்கு வரும் தார்சாலை சேதமாகி குண்டும், குழியுமாக இருந்தது. விழா நடைபெறும் இடத்துக்கு அருகே 4 வழிச்சாலை உள்ளது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் விழாவுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு தேவையான இடவசதி செய்யும்படி அறிவுறுத்தினார்.

இதற்கிடையே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுவதை அங்குள்ள நாகலட்சுமிநகர் பகுதி முழுவதும் உள்ள சேதமான சாலைகள் புதிதாக அமைக்கப்பட இருக்கின்றன. இதற்கான பணிகள் கடந்த 2 நாட்களாக நடக்கிறது.

மேலும் செய்திகள்