மணல் லாரி மோதி வாலிபர் சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

மணல் லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவத்தில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-12-20 22:15 GMT

சிதம்பரம்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ஆனந்தபிரபு (வயது 29). இவர் நேற்று முன்தினம் காலையில், சி.அரசூரில் கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணல்குவாரிக்கு லாரிகள் செல்லும் பாதையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குமராட்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். அப்போது சி.அரசூர் கிராமத்தில் உள்ள மணல் குவாரிக்கு சென்ற லாரி மோதியதால் ஆனந்தபிரபு இறந்து விட்டதாகவும், எனவே அந்த மணல் குவாரியை மூட வேண்டும், அதுவரையிலும் ஆனந்தபிரபுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லக்கூடாது என்று கூறி ஆனந்தபிரபுவின் உறவினர்கள் மற்றும் கிராமத்து மக்கள் போராட்டம் செய்தனர். போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, உடலை எடுத்து செல்ல அவர்கள் அனுமதித்தனர்.

இதையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து, சிதம்பரம் அரசு மருத்துவமனை முன்பு ஆனந்தபிரபுவின் உறவினர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா, இன்ஸ்பெக்டர்கள் சிதம்பரம் தாலுகா அம்பேத்கர், ஸ்ரீமுஷ்ணம் பீர்பாஷா, தாசில்தார் மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, சி.அரசூர் மணல் குவாரிக்கு சென்ற லாரி மோதி தான் ஆனந்தபிரபு உயிரிழந்து உள்ளார். இதற்கு காரணமான லாரி டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும், சி.அரசூரில் உள்ள மணல் குவாரியை மூட வேண்டும். இறந்த ஆனந்தபிரபுவின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் அப்போது தான் உடலை பெற்று செல்வோம் என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று தெரிவித்தனர். அதன்பேரில் மறியலை கைவிட்ட அவர்கள், கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் ஆனந்தபிரபுவின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பால அரவாளி, நகர செயலாளர்கள் கோவி பாவாணன், ஆதிமூலம், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிசெயலார் செல்லப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கற்பனை செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்யும் வரையில் தற்காலிகமாக மணல் குவாரியில் இருந்து மணல் அள்ளப்படாது என்றும், குவாரியை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக வருகிற 3–1–2018 அன்று சமாதான கூட்டம் நடத்தி தீர்வு காண்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதையேற்று, ஆனந்தபிரபுவின் உடலை வாங்க அவரது உறவினர்கள் சம்மதித்தனர். முன்னதாக அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நிகழாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்