எண்ணூரில் குடிநீர்-சாலை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
எண்ணூரில் குடிநீர், சாலை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர்,
எண்ணூர் காமராஜர் நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், அவ்வாறு வினியோகிக்கப்படும் தண்ணீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு கலங்கலாக வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் அந்த பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
ஆர்ப்பாட்டம்
இதனை கண்டித்தும், தங்களுக்கு குடிநீர், சாலை, தெரு விளக்கு வசதிகள் செய்து தர வேண்டும். மழைநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் காமராஜர் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் நேற்று காலை காமராஜர் நகர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கிராம தலைவர் மகேந்திரன், முன்னாள் நகராட்சி தலைவர் திருசங்கு ஆகியோர் தலைமையில், பெண்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கையில் கலங்கலாக வந்த குடிநீரை பாட்டிலில் பிடித்து எடுத்து வந்து இருந்தனர்.
சாலை மறியல்
சுமார் 2 மணி நேரமாக நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது அதிகாரிகள் யாரும் நேரில் வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், எண்ணூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தால் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் தினகரன் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், அதிகாரிகள் நேரில் வரவேண்டும் என வலியுறுத்தினர்.
அதற்குள் தகவல் அறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வினியோகத்தை சீரமைக்கவும், சாலை உள்ளிட்ட வசதிகள் தொடர்பாக அந்தந்த துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.