அரசு பள்ளியில் கோஷ்டி மோதல்; 2 பேருக்கு கத்திக்குத்து 3 மாணவர்கள் கைது

கறம்பக்குடி அரசு பள்ளியில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-12-20 22:30 GMT
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 800 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இப்பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே முன்விராதம் காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் 2 தரப்பினரை சேர்ந்தவர்களும், இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களை வரவழைத்தனர். இதையடுத்து இந்த மோதல், கோஷ்டி மோதலாக மாறியது. இதில் 2 தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.

2 பேருக்கு கத்திக்குத்து

இதில் முன்னாள் மாணவர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. பின்னர் படுகாயமடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோஷ்டி மோதல் தொடர்பாக 3 மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப்பள்ளியில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பள்ளி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்