புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்பட பா.ஜ. உதவும்; சாமிநாதன் பேட்டி

புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்பட பா.ஜ. உதவி செய்யும் என்று சாமிநாதன் தெரிவித்தார்.

Update: 2017-12-20 23:00 GMT

புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவையில் சுமார் 50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி நடந்துள்ளது. ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மை காரணமாக வேலைகிடைக்காமல் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ளனர். ஆளும் காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. படித்த இளைஞர்கள் பலர் வெளிமாநிலத்துக்கு குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு செல்கின்றனர்.

புதுவை காங்கிரஸ் அரசின் செயல்படாத தன்மை, ஊழலை கண்டித்து வருகிற 23–ந்தேதி காலை பாரதீய ஜனதா கட்சி சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. தவளக்குப்பத்தில் இருந்து புதுவை சுதேசி மில் நோக்கி ஒரு பிரிவினரும், வில்லியனூரில் இருந்து சுதேசி மில் நோக்கி மற்றொரு தரப்பினரும் இந்த நடைபயணத்தில் கலந்துகொள்கின்றனர். இறுதியில் சுதேசி மில் அருகே பொதுக்கூட்டம் நடைபெறும். அதன்பின் தொகுதிதோறும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

அமைச்சர் கந்தசாமி அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்துக்கான சம்பளம் போட நிதி இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் அதன்பின் ஓரிரு நாட்களிலேயே முதல்–அமைச்சர் நாராயணசாமி நிதி நெருக்கடி இல்லை என்று கூறுகிறார். இருவரும் மாறிமாறி பேசி மக்களை குழப்புகிறார்கள். எனவே புதுவையின் நிதிநிலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

சமூக நலத்துறை அமைச்சரான கந்தசாமி சிறப்புக்கூறு நிதியை முறைகேடாக செலவிட்டுள்ளார். இதில் வீடு வழங்கியதிலும் முறைகேடு நடந்துள்ளது. ரோடியர், சுதேசி மில்களில் துணி உற்பத்தி செய்தபோது தனியாரிடம் தரமற்ற துணிகளையும் வாங்கியுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு லாபத்தில் இயங்கிய கூட்டுறவு நிறுவனங்கள் தற்போது நஷ்டத்தில் இயங்குகின்றன.

கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சி, அதிகாரத்தில் இருந்தவர்கள், பல எம்.எல்.ஏ.க்கள் தனியார் சொத்துகளை அபகரித்துள்ளனர். கோவில் நிலங்களும் அபகரிக்கப்பட்டு உள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பாரதீய ஜனதா கட்சியிடமோ, கவர்னரிடமோ புகார் அளிக்கலாம். அவர்களுக்காக போராட பாரதீய ஜனதா கட்சி தயாராக உள்ளது.

முதலியார்பேட்டையில் அரசுக்கு சொந்தமான வானொலி திடலும் அபகரிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த கல்வெட்டும் சிதைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாருக்கும் பட்டா மாற்றம் செய்யாத நிலையில் அரசியல்வாதிகளுக்கு மட்டும் பட்டா மாற்றம் நடக்கிறது.

இந்த அரசை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களே பகிரங்கமாக பேசி வருகிறார்கள். புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்பட பாரதீய ஜனதா தேவையான உதவிகளை செய்யும். பாரதீய ஜனதா மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் என்று மக்கள் நம்புகிறார்கள். இவ்வாறு சாமிநாதன் கூறினார்.

மேலும் செய்திகள்