ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-20 22:30 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் செல்லத்துரை முன்னிலை வகித்தார்.

துப்புரவு பணியாளர்களிடம் ஒரு நாளில் 4 நேரங்களில் வாங்கப்படும் கையெழுத்து முறையை கைவிட்டு 2 நேரங்களில் மட்டும் கையெழுத்து வாங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். துப்புரவு தொழிலாளர்களை இதர பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது. மாநகராட்சியில் பணிபுரிந்து வரும் சுய உதவிக்குழு துப்புரவு தொழிலாளர்களுக்கும், மலேரியா பணியாளர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 5–ந் தேதிக்குள் சம்பளம் வழங்கவேண்டும்.

சுய உதவிக்குழு தொழிலாளர்களின் மாத சம்பளத்தில் வைப்புநிதிக்கு பிடித்தம் செய்யும் தொகையை வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் அந்தந்த மாதமே செலுத்தவேண்டும். மாநகராட்சியின் அனைத்து பிரிவு தினக்கூலி துப்புரவு தொழிலாளர்களுக்கும் அரசு உத்தரவுப்படி தினசரி ஊதியமாக ரூ.624 வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதில் சங்க நிர்வாகிகள் மாரிமுத்து, நாச்சிமுத்து, ஜெகநாதன் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்