அஜ்ஜூர் கிராமத்தில் இருந்து வெளியேற்றக் கூடாது என வலியுறுத்தி ஊட்டியில் 24–ந் தேதி கவன ஈர்ப்பு பேரணி
அஜ்ஜூர் கிராமத்தில் இருந்து மக்களை வெளியேற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி பேரணி நடத்தப்படும் என்று அஜ்ஜூர் கிராம பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கூறினார்.
ஊட்டி,
அஜ்ஜூர் கிராமத்தில் இருந்து மக்களை வெளியேற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி, ஊட்டியில் 24–ந் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேரணி நடத்தப்படும் என்று அஜ்ஜூர் கிராம பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பொன்னன் கூறினார்.
கோத்தகிரி அருகே உள்ள அஜ்ஜூர் கிராமத்தில் 400 ஆண்டுகளுக்கும் மேல் வீடுகள் கட்டி, விவசாயம் செய்து வாழ்ந்து வரும் படுகர் இன மக்களை நிலத்தை விட்டு காலி செய்ய வேண்டும் என்று 140 குடும்பங்களுக்கு வனத்துறையினர் நோட்டீசு வழங்கி உள்ளனர். இது குறித்து கடந்த 17–ந் தேதி அஜ்ஜூர் கிராமத்தில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 300–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு, ஆலோசனை கூட்டம் நடத்தி அஜ்ஜூர் கிராம மக்களை கிராமத்தை விட்டு வெளியேற்றக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்த நிலையில் அஜ்ஜூர் கிராம பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பொன்னன் ஊட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஆங்கிலேயர் நீலகிரி மாவட்டத்துக்கு வந்த போது, கடந்த 1779 மற்றும் 1800–ம் ஆண்டுகளில் ஆங்கிலேயரின் வரைபடத்தில் அஜ்ஜூர் கிராம பெயர் இடம் பெற்றுள்ளது. அப்போது நிலத்துக்கான நிலபுல எண் இல்லை. கிராமத்தின் பெயர் மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆரம்ப காலத்தில் இருந்து கிராமத்தில் குடியிருந்து வரும் மக்கள் 90 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்தும், வீடுகளை கட்டியும் குடியிருந்து வருகின்றனர். அதற்கான அத்தாட்சிகள் உள்ளன.
கடந்த 2008–ம் ஆண்டு அஜ்ஜூர் கிராமத்தில் 180 குடும்பத்தினருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப் பட்டு உள்ளது. ஆரம்ப காலத்தில் பழங்குடியினர் பட்டியலில் இருந்த படுகர் இன மக்கள், தற்போது வனத்துறை நடவடிக்கையால் அஜ்ஜூர் கிராமத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு உள்ளது. அப்பகுதியில் அரசு பள்ளிக்கூடம், சுடுகாடு போன்றவை அரசு மூலம் அமைக்கப்பட்டு உள்ளன.
கடந்த 1980–ம் ஆண்டு கிராமத்தில் உள்ள மக்களை வனத்துறையினர் வெளியேற்றுவதாக அறிவுறுத்தியதன் பேரில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து தற்போது கிராம மக்களை வெளியேற்றக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு, வனத்துறை வழங்கிய நோட்டீசுக்கு தடை ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
4 வார காலத்தில் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. அஜ்ஜூர் கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று நோட்டீசு வழங்கிய வனத்துறையின் நடவடிக்கையை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகை யிலும் வருகிற 24–ந் தேதி ஊட்டி ஏ.டி.சி.யில் இருந்து காபிஹவுஸ், சேரிங்கிராஸ் வழியாக பேரணி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த படுகர் இன மக்கள் கலந்து கொள்ள உள்ளனர். கிராம மக்கள் பேரணியாக சென்று மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.