கோவில்பட்டியில் 46 தீக்குச்சி தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

கோவில்பட்டியில் 46 தீக்குச்சி தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மின்வாரிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-12-20 21:15 GMT

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் 46 தீக்குச்சி தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மின்வாரிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

வனத்துறை அனுமதி பெற...

தீக்குச்சி தொழிற்சாலைகள், வனத்துறையிடம் அனுமதி பெற்று செயல்பட வேண்டும் என்று கோவில்பட்டி கருங்காலிபட்டியைச் சேர்ந்த செயல்முருகன், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி தீக்குச்சி தொழிற்சாலைகள் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்று ஐகோர்ட்டு கடந்த 2015–ம் ஆண்டு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீக்குச்சி தொழிற்சாலை உரிமையாளர்கள் தமிழக அரசிடம் முறையிட்டனர்.

இதையடுத்து வனத்துறையிடம் அனுமதி பெறுவதில் இருந்து தீக்குச்சி தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளித்து, தமிழக அரசு சிறப்பு ஆணை பிறப்பித்தது. இந்த நிலையில் செயல் முருகன் இதுதொடர்பாக மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் முறையிட்டார். தொடர்ந்து கடந்த மாதம் 15–ந் தேதிக்குள் தீக்குச்சி தொழிற்சாலைகள் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மின் இணைப்பு துண்டிப்பு

இதையடுத்து கடந்த 6–ந் தேதிக்குள் வனத்துறையிடம் அனுமதி பெறுமாறு, மின்வாரியத்தில் இருந்தும் தீக்குச்சி தொழிற்சாலைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனாலும் கோவில்பட்டியில் 46 தீக்குச்சி தொழிற்சாலைகள் வனத்துறையிடம் அனுமதி பெறவில்லை. இதையடுத்து அந்த தொழிற்சாலைகளின் மின் இணைப்புகளை மின்வாரியத்தினர் நேற்று மதியம் துண்டித்தனர். இதனால் அந்த தொழிற்சாலைகளில் வேலை செய்த சுமார் 400–க்கு மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

தொடர்ந்து மாலையில் நே‌ஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம், செயலாளர் சேதுரத்தினம், நே‌ஷனல் சிறிய தீக்குச்சி உற்பத்தியாளர் சங்கம் ஜவ்வாது, ரத்தினகுமார், இன்பராஜ் மற்றும் தொழிலாளர்கள் கோவில்பட்டி– இளையரசனேந்தல் ரோடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பேச்சுவார்த்தை

முற்றுகையிட்டவர்களிடம் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், மின்வாரிய கோட்ட பொறியாளர்கள் சண்முகசுந்தரம், குருசாமி, உதவி மின்பொறியாளர்கள் மிகாவேல், நாகராஜன், முருகேசன், மாரியப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் கூறுகையில், ஐகோர்ட்டு உத்தரவின்படி தீக்குச்சி தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தீக்குச்சி தொழிற்சாலை உரிமையாளர்கள் ஐகோர்ட்டில் முறையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தினர். தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்