திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சென்னை வாலிபர்கள் உள்பட 4 பேர் சிக்கினர்

சிவகங்கை பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த வாலிபர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2017-12-20 21:30 GMT

சிவகங்கை,

சிவகங்கை பகுதியில் உள்ள பூட்டிய வீடுகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தது. இதனையடுத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட திருடர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன் மேற்பார்வையில் நகர் இன்ஸ்பெக்டர் மோகன், சப்–இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த சிலர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவருடைய உதவியுடன் அடிக்கடி இப்பகுதிக்கு வந்து திருடிவிட்டு செல்வது தெரியவந்தது. இதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் இளையான்குடியை அடுத்த கலைக்குளம் கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார்(வயது 25) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், தினேஷ்குமார் சென்னை எண்ணூரில் வசித்து வருகிறார். அவர் தன்னுடைய நண்பர்களான எண்ணூரை சேர்ந்த பாலா என்ற யுவராஜ்(22), விக்கி என்ற விக்னேஷ், அம்பத்தூரை சேர்ந்த ராம்குமார்(25) ஆகியோருடன் சேர்ந்து சிவகங்கை பகுதியில் உள்ள பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து தினேஷ்குமார் கொடுத்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார் ராம்குமார் மற்றும் பாலா என்ற யுவராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 3½ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் சிவகங்கையை அடுத்த சூரக்குளம் ரோட்டில் வசிக்கும் செந்தில்குமார் என்பவரது வீட்டில் புகுந்து நகை மற்றும் பணம் திருடிய வழக்கில் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் வசிக்கும் பிரபாகரன்(32) என்பவரை சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் கைது செய்தார். அவரிடம் இருந்து 8½ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்