சாத்தான்குளத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.2 லட்சம் திருட்டு

சாத்தான்குளத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ.2 லட்சத்தை திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-12-19 22:28 GMT

சாத்தான்குளம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சிறப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் திரவியம் (வயது 74). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் தனது ஊரில் உள்ள நிலத்தை வாங்க திட்டமிட்டார். இதற்காக அவர் நேற்று முன்தினம் சாத்தான்குளம்– இட்டமொழி ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று, தனது சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் எடுத்தார்.

பின்னர் அவர் அந்த பணத்தை கைப்பையில் வைத்து, அதனை தனது ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினார். பின்னர் அவர் ஸ்கூட்டரில் சாத்தான்குளம் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ள பத்திர எழுத்தரை சந்தித்து, நிலத்தை பத்திர பதிவு செய்வது தொடர்பாக பேசினார்.

பின்னர் தங்கராஜ் திரவியம் சாத்தான்குளத்தில் உள்ள தன்னுடைய நண்பரான ஓய்வுபெற்ற ஆசிரியரை சந்தித்து பேசினார். பின்னர் அவர் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். வீட்டுக்கு சென்றதும் பணத்தை எடுப்பதற்காக தங்கராஜ் திரவியம் ஸ்கூட்டரின் இருக்கை அடியில் உள்ள பெட்டியை திறந்து பார்த்தார். அப்போது கைப்பையுடன் இருந்த ரூ.2 லட்சம் திருடு போனது தெரிய வந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

தங்கராஜ் திரவியம் வங்கியில் இருந்து பணத்தை வாங்கி வந்தபோது, அவரை பின்தொடர்ந்த மர்மநபர், தங்கராஜ் திரவியம் கவனிக்காதபோது நைசாக அவரது ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் உள்ள பெட்டியை திறந்து பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்தார். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்