நாராயண் ரானே, ஏக்நாத் கட்சே விரைவில் மந்திரிசபையில் இடம்பெறுவர் தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி

‘‘நாராயண் ரானே, ஏக்நாத் கட்சே ஆகியோர் விரைவில் மந்திரிசபையில் இடம்பெறுவர்’’ என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

Update: 2017-12-19 22:30 GMT

நாக்பூர்,

‘‘நாராயண் ரானே, ஏக்நாத் கட்சே ஆகியோர் விரைவில் மந்திரிசபையில் இடம்பெறுவர்’’ என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

நாராயண் ரானே

காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் முதல்–மந்திரி நாராயண் ரானே, மராட்டிய சுவாபிமானி பக்ஷா என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்ததுடன், பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கியமானார்.

கடந்த ஆண்டில் நில முறைகேடு புகார், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் உடன் தொலைபேசியில் உரையாடல் உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால், பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே மந்திரி பதவியை இழந்தார்.

ஏக்நாத் கட்சே பேச்சு

இந்த நிலையில், நேற்று முன்தினம் சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, ஏக்நாத் கட்சே எழுந்து பேசினார். அப்போது, மந்திரிகள் மீதும், மராட்டிய அரசின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய அவர், அடுக்கடுக்கான கேள்விகளால் மந்திரிகளை துளைத்தெடுத்தார்.

மிகவும் ஆவேசத்துடன் காணப்பட்டார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேசையை தட்டி ஏக்நாத் கட்சேயை ஊக்கப்படுத்தினர். இதனால், அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பட்னாவிஸ் பேட்டி

பரபரப்பான இந்த சூழலில், நேற்று சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ‘‘மந்திரிசபை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். நாராயண் ரானேவும், ஏக்நாத் கட்சேவும் பா.ஜனதா சார்பில் மந்திரிசபையில் இடம்பெறுவர்’’ என்றார்.

கூட்டணி கட்சியான சிவசேனாவின் எதிர்ப்பையும் மீறி நாராயண் ரானேக்கு மந்திரிசபையில் பா.ஜனதா வாய்ப்பு அளிக்கிறது. ஆகையால், கூட்டணி கட்சியில் மேலும் விரிசல் ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மேலும் செய்திகள்