பள்ளிக்குள் நுழைந்து தலைமை ஆசிரியை மீது கொடூர தாக்குதல் தலைமறைவான பா.ஜனதா பிரமுகரை போலீஸ் தேடுகிறது

பெங்களூருவில், வட்டி பணம் கொடுக்காததால் பள்ளிக்குள் நுழைந்து தலைமையாசிரியை மீது கொடூர தாக்குதல்.

Update: 2017-12-19 20:45 GMT

பெங்களூரு,

பெங்களூருவில், வட்டி பணம் கொடுக்காததால் பள்ளிக்குள் நுழைந்து தலைமையாசிரியை மீது கொடூர தாக்குதல் நடத்தி தலைமறைவான பா.ஜனதா பிரமுகரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

தலைமை ஆசிரியை மீது தாக்குதல்

பெங்களூரு சிங்கநாயகனஹள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஆஷா. இவர் பள்ளி நிர்வாகத்துக்காக பா.ஜனதா பிரமுகரும், ரியல் எஸ்டேட் அதிபருமான ராமகிருஷ்ணப்பாவிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.70 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். சமீபத்தில் ஆஷா சரியாக வட்டி பணம் செலுத்தவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பள்ளிக்குள் நுழைந்த ராமகிருஷ்ணப்பா, ஆஷாவின் அறைக்கு சென்று அவரிடம் வட்டி பணத்தை கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணப்பா தலைமை ஆசிரியையின் கன்னத்தில் அறை விட்டுள்ளார். மேலும், அந்த அறையைவிட்டு ஆஷாவை வெளியே விடாமல் தடுத்து பெல்டால் அவர் மீது ராமகிருஷ்ணப்பா கொடூரமாக தாக்கியுள்ளார்.

வலைவீச்சு

இந்த நிலையில், ராமகிருஷ்ணப்பா மீது ஆஷா ராஜனகுன்டே போலீசில் புகார் செய்தார். போலீசில் புகார் செய்யப்பட்டு இருப்பதை அறிந்த ராமகிருஷ்ணப்பா தலைமறைவானார். மேலும், ராமகிருஷ்ணப்பாவின் மகனும், எலகங்கா பகுதி பா.ஜனதா இளைஞர் அமைப்பின் தலைவருமான ஜனார்த்தன், ஆஷாவை தொடர்பு கொண்டு போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறும்படி மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்தும் ராஜனகுன்டே போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகார்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜனார்த்தனை பிடித்து விசாரித்து வருகிறார்கள். மேலும், தலைமறைவாக உள்ள அவருடைய தந்தை ராமகிருஷ்ணப்பாவை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

வீடியோ வெளியானது

இந்த நிலையில் ராமகிருஷ்ணப்பா, ஆஷாவை தாக்கும் காட்சிகள் அவருடைய அறையில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் நேற்று தனியார் தொலைக்காட்சிகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

மேலும் செய்திகள்