ஒகி புயலில் சிக்கி உணவின்றி தவித்தோம் மீண்டும் குடும்பத்தை பார்ப்போம் என்று நினைத்து கூட பார்க்கவில்லை கடலூர் திரும்பிய மீனவர்கள் நெகிழ்ச்சி
ஒகி புயலில் சிக்கி உணவின்றி தவித்ததாகவும், மீண்டும் குடும்பத்தை பார்ப்போம் என்றும் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று கடலூர் திரும்பிய மீனவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.;
கடலூர் முதுநகர்,
கடலூர் சோனாங்குப்பத்தை சேர்ந்த ராஜா, ராமகிருஷ்ணன், ஜெகன், குமார், ஆறுமுகம், குமரன் ஆகியோர் மீன்பிடி தொழிலுக்காக கடந்த மாதம்(நவம்பர்) 10–ந்தேதி கடலூரில் இருந்து பஸ்சில் புறப்பட்டு கன்னியாகுமரிக்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து 22–ந்தேதி பூத்துறையை சேர்ந்த பட்டம் ஆண்டனி என்பவருக்கு சொந்தமான படகில் கடலூரை சேர்ந்த 6 பேர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 12 பேர் சின்னதுரை துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கடந்த 1–ந் தேதி குஜராத் கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தபோது, ஒகி புயல் தாக்கியது. அப்போது பயங்கர காற்று வீசியதால், 12 பேரும் தவித்தனர். இருப்பினும் 2–ந்தேதி படகுடன் குஜராத் மாநிலம் வேறாவூர் துறைமுகத்தில் கரை ஒதுங்கி உயிர் பிழைத்தனர். சொந்த ஊர் செல்ல படகில் டீசல் இல்லாததாலும், கையில் பணம் இல்லாததாலும் அங்கேயே தவித்தனர். இது பற்றி அறிந்ததும் தமிழக அரசு அவர்களுக்கு பணம் மற்றும் டீசல், பச்சரிசி ஆகியவற்றை வழங்கியது. ஒகி புயலில் சிக்கி தவித்த 6 மீனவர்களும் நேற்று கடலூருக்கு வந்தனர். அவர்களை, குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கட்டித்தழுவி வரவேற்றனர்.
இது குறித்து 6 மீனவர்களும் நிருபர்களிடம் கூறியதாவது:–
கடந்த 1–ந் தேதி குஜராத் மாநிலம் வேறாவூர் துறைமுகத்தில் இருந்து 80 நாட்டிக்கல் தொலைவில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தோம். அப்போது பயங்கர காற்று வீசியது. இதனால் படகு அங்கும், இங்குமாக ஆடியது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தோம். 6 மணி நேரம் தொடர்ந்து காற்று வீசியதால் மரண பயத்தில் இருந்தோம். எப்படியாவது வேறாவூர் துறைமுகத்துக்கு சென்று விடலாம் என்று படகை மெதுவாக துறைமுகம் நோக்கி செலுத்தினோம். மறுநாள்தான் துறைமுகத்தை அடைந்த பிறகுதான் நிம்மதி ஏற்பட்டது. 6 நாட்களுக்கு பிறகு தமிழக அரசு 1,000 லிட்டர் டீசல், தலா 2 ஆயிரம் ரூபாய், 10 கிலோ பச்சரி கொடுத்தது. அதை வைத்துக்கொண்டு 9–ந் தேதி வேறாவூர் துறைமுகத்தில் இருந்து படகில் புறப்பட்டு, 14–ந் தேதி கொச்சிக்கு வந்தோம். அதன்பிறகு அங்கிருந்து ரெயில் மூலம் சேலத்துக்கு வந்தோம். சேலத்தில் இருந்து பஸ்சில் ஏறி கடலூருக்கு இன்று(அதாவது நேற்று) அதிகாலை 3.30 மணிக்கு வந்தோம். நாங்கள் உயிர் பிழைப்போம் என்றும், மீண்டும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை பார்ப்போம் என்றும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இறைவன் அருளால் உயிர் பிழைத்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.