நிலுவையில் உள்ள சம்பளம் வழங்கக்கோரி பொதுப்பணித்துறை தினக்கூலி ஊழியர்கள் நூதன போராட்டம்
நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி பொதுப்பணித்துறை தினக்கூலி ஊழியர்கள் நூதன போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி,
புதுச்சேரி பொதுப்பணித்துறை தினக்கூலி ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை அவர்கள் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தலையில் முக்காடு போட்டு நூதனமுறையில் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு சங்க தலைவர் தென்னரசு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரமேஷ், சந்திரன், அண்ணாதுரை, முரளி, பாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
10 மாதங்கள் வழங்கப்படாமல் உள்ள நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். சட்டமன்றத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் அறிவித்தபடி 21 நாள் வேலையை உடனடியாக வழங்க வேண்டும். இறந்து போன தினக்கூலி ஊழியர் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.