திண்டுக்கல்–மதுரை 4 வழிச்சாலையில் டிரைவர் இல்லாமல் பின்னோக்கி ஓடி வட்டமிட்ட கன்டெய்னர் லாரி
திண்டுக்கல்–மதுரை 4 வழிச்சாலையின் நடுவே கன்டெய்னர் லாரி ஒன்று டிரைவர் இல்லாமல் 15 நிமிடம் பின்னோக்கி ஓடி வட்டமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சின்னாளபட்டி,
திண்டுக்கல்–மதுரை 4 வழிச்சாலையில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்ல அமைக்கப்பட்ட இணைப்பு சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தன. இதையடுத்து விபத்துகளை தடுக்க இணைப்பு சாலைகளின் அனைத்து இடங்களிலும், வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் போலீசார் சார்பில் இரும்பாலான தடுப்பு கம்பிகள் (பேரிகார்டு) அமைக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் வேகமாக வரும் சில வாகனங்கள் இந்த தடுப்பு கம்பிகளை கவனிக்காமல் அதில் மோதி சேதப்படுத்தும் நிகழ்வுகளும் நடந்த வண்ணம் உள்ளன. வெள்ளோடு பிரிவிலும், சாலையின் இருபுறமும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன. நேற்று காலை 8 மணியளவில் வெள்ளோடு பிரிவில் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள், தொழிலாளர்கள் என 50–க்கும் மேற்பட்டோர் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தூத்துக்குடிக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி வந்தது. லாரியை கிருஷ்ணகிரியை சேர்ந்த கார்த்திக் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். வேகமாக வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வெள்ளோடு பிரிவில் இருந்த தடுப்பு கம்பியில் மோதியது. இதில் அந்த தடுப்பு கம்பிகள் தூக்கி வீசப்பட்டன. இதனைக்கண்ட மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்தபடி அங்குமிங்குமாக ஓட்டம் பிடித்தனர். நல்ல வேளையாக அந்த சமயத்தில் வாகனங்கள் எதுவும் வரவில்லை.
இதையடுத்து உடனடியாக சாலையின் ஓரத்தில் லாரியை நிறுத்திய டிரைவர் தள்ளாடியபடி லாரியில் இருந்து கீழே இறங்கினார். ஆனால் லாரியின் சாவியை எடுக்கவில்லை. இதனால் லாரி இயக்கத்தில் இருந்தது. மேலும் லாரியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அடுத்த சில வினாடிகளில் லாரி பின்னோக்கி வேகமாக நகர தொடங்கியது.
பின்னர் 4 வழிச்சாலைக்கு சென்ற கன்டெய்னர் லாரி சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் ஏறி, மறுமார்க்கமாக உள்ள சாலையில் இறங்கியது. அந்த லாரி தடுப்பு சுவரில் ஏறி இறங்குவதுமாக பின்னோக்கி வட்டமடித்துக்கொண்டே இருந்தது. இதனால் சாலையில் வந்த அனைத்து வாகனங்களையும் பொதுமக்கள் சில அடி தூரத்திலேயே நிறுத்தினர்.
இந்தநிலையில் லாரியை நிறுத்த டிரைவர் பலமுறை முயற்சி செய்து, லாரியை சுற்றிச்சுற்றி வந்தார். மேலும் லாரியில் ஏற முயன்று பலமுறை கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் சிலர் லாரியின் சக்கரத்தில் பெரிய கற்களை கொண்டு வந்து போட்டனர். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் தான் முடிந்தது.
ஒருகட்டத்தில் லாரியின் முன்பக்க சக்கரம் சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் சிக்கிக்கொண்டது. அதில் இருந்து லாரி வெளிவர முடியாமல் மண்ணை வாரி இரைத்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, டிரைவர் லாரியில் ஏறி என்ஜினை நிறுத்த முயன்றார். இந்தநிலையில் திடீரென்று பள்ளத்தில் இருந்து லாரி பின்பக்கமாக நகர்ந்தது. அப்போதும் டிரைவர் லாரியில் இருந்து கீழே விழுந்தார்.
இதற்கிடையே பள்ளத்தில் சிக்கியதால் லாரியின் முன்பக்க அச்சு முறிந்து மண்ணுக்குள் மாட்டிக் கொண்டது. சுமார் 15 நிமிடங்கள் பின்னோக்கி வட்டமடித்தபடி, ஓடிய லாரி ஒருவழியாக நகர முடியாமல் நின்றது. அப்போது கீழே நின்றபடியே லாரியின் சாவியை டிரைவர் எடுத்து என்ஜின் இயக்கத்தை நிறுத்தினார்.
இதையடுத்து டிரைவர் கார்த்திக்கிடம் பொதுமக்கள் விசாரித்தனர். அப்போது தான் அவர் மது போதையில் இருப்பது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து பொதுமக்கள் அம்பாத்துரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து டிரைவர் கார்த்திக்கை கைது செய்தனர். சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.