அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 20 வீடுகள் அகற்றம் அதிகாரிகளுடன் வாக்குவாதம்; 4 பேர் கைது

அந்தியூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 20 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அப்போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-12-19 22:00 GMT

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் பேரூராட்சிக்கு உள்பட்ட காமநாயக்கன்பாளையம் காகா பூந்தோட்டம் பகுதியில் 20 பேர் குடிசை அமைத்து வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அரசு நிலத்தை ஆக்கிரமித்து உள்ள குடிசை வீடுகளை அகற்ற வேண்டும் என்று வருவாய்த்துறை சார்பில் இங்குள்ளவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் வீடுகளை அகற்றவில்லை.

இந்த நிலையில் அந்தியூர் தாசில்தார் சிவகாமி தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று காலை காகா பூந்தோட்டம் பகுதிக்கு பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர். இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரவி (அந்தியூர்), இளங்கோ (பவானி) மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொக்லைன் எந்திரத்துடன் வீடுகளை இடித்து அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் முயன்றனர். இதை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் குடிசை வீடுகளை இடித்து அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘நாங்கள் இங்கு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். இந்த நிலையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து குடிசை வீடுகள் கட்டி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததுடன், அதை இடித்து அகற்றிவிட்டு வீடுகளை காலி செய்ய வேண்டும் என்றனர். இதுகுறித்து நாங்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தோம்.

அப்போது அந்த மனுவில், ‘நாங்கள் குடியிருந்து வரும் பகுதி அரசு நிலம் எனக்கூறி எங்கள் வீடுகளை இடித்து அகற்ற வேண்டும் என அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்து உள்ளனர். நாங்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள். எனவே எங்கள் குடிசை வீடுகளை இடித்து அகற்றக்கூடாது. மேலும் எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று குறிப்பிட்டிருந்தோம். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், ‘இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதுவரை குடிசை வீடுகள் இடித்து அகற்றப்படமாட்டாது,’ எனவும் தெரிவித்தனர். எனவே இலவச வீட்டுமனை வழங்கும் வரை நாங்கள் குடியிருக்கும் வீட்டை காலி செய்யமாட்டோம். மீறி இடித்தால் சாலை மறியலில் ஈடுபடுவோம்,’ என்றனர். இதைத்தொடர்ந்து ஆப்பக்கூடல் கிராம நிர்வாக அதிகாரி ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகேஷ்வரி (வயது 53), புஷ்பலதா (38), கோவிந்தசாமி (58), முருகன் (52) ஆகியோரை ஆப்பகூடல் போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஆப்பக்கூடல் பேரூராட்சி ஊழியர்கள் குடிசை வீட்டில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்தனர். பின்னர் அனைத்து குடிசை வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன.

அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 20 வீடுகள் இடித்து அகற்றப்பட்ட சம்பவத்தால் அந்தியூர் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்