குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 349 மனுக்கள்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2017-12-19 22:00 GMT

திருவள்ளூர்,

இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் நிலபிரச்சனை, ரே‌ஷன்கார்டு, வேலைவாய்ப்பு, கடனுதவி, கல்வி உதவித்தொகை, சாலை வசதி, போக்குவரத்து வசதி, மின்சார வசதி போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 349 மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் கொத்தடிமையில் இருந்து விடுவிக்கப்பட்ட தையல் பயிற்சி பெற்ற 10 பெண்களுக்கு ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு விலையில்லா தையல் எந்திரங்களையும், வருவாய்த்துறையின் சார்பாக ஏரியில் மூழ்கி உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.15 ஆயிரத்திற்கான காசோலைகளையும் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் தேவேந்திரசிங் பாரிக்கர், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ஜானகிராமன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கலைச்செல்வி மற்றும் திரளான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்