கோவை அருகே செங்கல் சூளைக்குள் புகுந்த காட்டு யானையை சீண்டும் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு

கோவை சுற்றுப்பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் அதிகளவில் பனை மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Update: 2017-12-19 22:15 GMT

கோவை,

கோவை அருகே கணுவாய், சின்ன தடாகம், வீரபாண்டி, மாங்கரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் அதிகளவில் பனை மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த பனை மரங்களின் உள்பகுதியில் இருப்பதை சாப்பிடுவதற்காக காட்டு யானைகள் அடிக்கடி செங்கல் சூளைகளுக்குள் புகுந்து விடுவது வழக்கம்.

அதன்படி ஒரு செங்கல் சூளைக்குள் புகுந்த காட்டு யானையை இளைஞர்கள் சிலர் சீண்டும் வீடியோ காட்சி வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ காட்சியில், செங்கல் சூளைக்குள் புகுந்த ஒரு காட்டு யானை அங்கிருந்து வெளியேறும்போது அதன் பின்னால் செல்லும் இளைஞர்கள் அதன் மீது கற்கள் மற்றும் கட்டையை எடுத்து வீசுவது, மண்ணை அள்ளி வீசுவதும், உடனே அந்த யானை துதிக்கையை தூக்கி சத்தமாக பிளிறியபடி அவர்களை துரத்துவதும் இடம்பெற்று உள்ளது.

இந்த வீடியோ முகநூல், வாட்ஸ்–அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த வீடியோவில், இளைஞர்கள் செய்யும் செயல் அந்த காட்டு யானையை சீண்டுவதுபோன்று இருக்கிறது. இந்த வீடியோ காட்சியை பார்த்ததும் இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட வன அதிகாரி சதீஷ், வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கோவை வனச்சரக அதிகாரி சுரேஷ் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்