புதுச்சேரியில் இருந்து 321 மதுபாட்டில்களை கடத்திய 3 பேர் கைது கார் பறிமுதல்

புதுச்சேரியில் இருந்து 321 மதுபாட்டில்களை கடத்திய 3 பேரை கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-12-19 22:45 GMT
நாமக்கல்,

புதுச்சேரியில் இருந்து ஈரோட்டிற்கு வெளிமாநில மதுபாட்டில்களை ஒரு காரில் கடத்தி செல்வதாக நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பன்னீர், சுபாஸ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் அடங்கிய குழுவினர் குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மதுவிலக்கு போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 321 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

3 பேர் கைது

விசாரணையில் அவர்கள் ஈரோட்டை சேர்ந்த மகேந்திரன் (வயது 38), விழுப்புரம் மாவட்டம் காண்டாக்கிபுரத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி (28), திருக்கோவிலூர் சார்லஸ் (29) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் புதுச்சேரியில் இருந்து குறைவான விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி வந்து, ஈரோட்டில் விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களிடம் இருந்து கார் மற்றும் 321 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்