பிரபல ரவுடி கொடூரக்கொலை; நண்பருக்கு சரமாரி வெட்டு காரில் வந்த மர்மகும்பல் வெறிச்செயல்

மேட்டூரில் பட்டப்பகலில் பிரபல ரவுடி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது நண்பருக்கு சரமாரி வெட்டு விழுந்தது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2017-12-19 23:15 GMT
மேட்டூர்,

சேலம் மாவட்டம் மேட்டூர் ஆர்.எஸ். பகுதியை சேர்ந்தவர் அமிர்தராஜ் (வயது 45), பிரபல ரவுடி. இதே பகுதியை சேர்ந்தவர் முரளி (42). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். நேற்று மதியம் 2 பேரும் மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியில் உள்ள ஒரு தாபா ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றனர். அங்கிருந்த குடில் போன்ற ஒரு அறையில் சாப்பிட அமர்ந்திருந்தனர்.

சாப்பாடு கொண்டு வர தாமதம் ஆனதால் இருவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது அங்கு திடீரென ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய மர்ம கும்பல், 2 பேரையும் குடிலில் இருந்து வெளியே வருமாறு அழைத்தது. உடனே, 2 பேரும் குடிலில் இருந்து வெளியே வந்தார்கள்.

உடனே, அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 2 பேரையும் சுற்றி வளைத்தனர். இதனால் 2 பேரும் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர். தப்பிச்செல்ல முயல்வதற்குள் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அமிர்தராஜையும், அவரது நண்பர் முரளியையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். கத்தியாலும் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதில் கழுத்து, கால், கைகளில் பலத்த வெட்டு விழுந்ததால் அமிர்தராஜ் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த முரளி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், துடித்துக்கொண்டிருந்த முரளியை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட அமிர்தராஜின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

ரவுடி அமிர்தராஜ் மீது ஆள்கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கொளத்தூர் மற்றும் கரும லைக்கூடல் போலீஸ் நிலையங்களில் உள்ளன. எனவே, முன் விரோதம் காரணமாக அவர் வெட்டி கொலை செய்யப் பட்டாரா? அல்லது ஆள்கடத்தல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்றதா? அல்லது பெண் விவகாரத்தில் அவர் தீர்த்துக்கட்டப் பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து மேட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து இந்த வெறிச் செயலில் ஈடுபட்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப் பட்டதால் மேட்டூரில் பதற்றமும், பர பரப்பும் நில வுகிறது. இதனால் அங்கு போ லீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்