சத்துணவு பணியாளர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக வழக்கு: முகாந்திரம் இருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சத்துணவு பணியாளர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-12-19 22:45 GMT

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த கே.தமிழ்செல்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

புதுக்கோட்டை மாவட்டத்தில் சத்துணவு பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 24.02.17 அன்று நேர்முகத்தேர்வு நடந்தது. இப்பணியிடங்களுக்கு சத்துணவு மையங்கள் அமைந்திருக்கும் பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது விதி. அதன்படி நானும் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டேன். ஆனால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. விதியை மீறி சத்துணவு மையங்களில் இருந்து 3 கி.மீட்டர் தூரத்துக்கு அப்பால் வசிக்கும் பலருக்கு பணி வழங்கியுள்ளனர்.

இந்த வேலைக்காக ஒவ்வொருவரிடமும் தலா ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை லஞ்சம் பெற்றுள்ளனர். லஞ்சம் கொடுக்காதவர்களை வேலைக்கு தேர்வு செய்யவில்லை. இவ்வாறு லஞ்சம் வாங்கிக்கொண்டு 130 பேரை சத்துணவு பணியாளர்களாக நியமனம் செய்துள்ளனர். இந்த நியமனங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்த சூழ்நிலையில் சத்துணவு பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முன் தேதியிட்டு பணி நியமன ஆணை வழங்கியுள்ளனர். இந்த மோசடி தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், அவரது நேர்முக உதவியாளர் (மதிய உணவு திட்டம்) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தேன். இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. இதனால் எனது புகாரின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர், நேர்முக உதவியாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இதேபோல மகாலட்சுமி என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களின் மீதான விசாரணை முடிவில் நீதிபதி ஏ.எம்.பஷீர்அகமது நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

மனுதாரர்களின் குற்றச்சாட்டு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு விசாரிக்க வேண்டும். முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் சட்டத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர்களின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என்று தெரியவந்தால் அதுதொடர்பான அறிக்கையை மனுதாரர்களிடம் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

முடிவில், மனுதாரரின் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தற்போதைய நிலையை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 30–ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்