தஞ்சையில் கோவில்களில் சனிப்பெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தஞ்சையில் உள்ள கோவில்களில் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2017-12-19 22:30 GMT

தஞ்சாவூர்,

சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவதை சனிப்பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி சனிபகவான் நேற்று விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசித்தார். இதையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள சனீஸ்வரனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவியப்பொடி போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் தீபம் ஏற்றினர்.

தஞ்சை மேலவீதியில் உள்ள சங்கரநாராயணசாமி கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, சனீஸ்வரனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. அதேபோல கொங்கணேஸ்வரர் கோவில், கரந்தை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், வொண்ணாற்றில் உள்ள தஞ்சை புரீஸ்வரர் கோவில், கீழவாசல் பூமாலை வைத்தியநாதன் சாமி கோவில் உள்பட அனைத்து சிவன்கோவில்களிலும் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி சனீஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக காவலர் குடியிருப்பு வளாகம் அருகே உள்ள தான்தோன்றி அம்மன் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி அர்ச்சகர் சீனிவாச சிவாச்சாரியார் தலைமையில் யாகபூஜை நடைபெற்றது. பின்னர் கலசங்களில் இருந்த புனிதநீரால் சனீஸ்வரனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல வல்லம் கடைவீதியில் உள்ள சோழீஸ்வரர் சாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

மேலும் செய்திகள்