வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி காளையார்கோவில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
காளையார்கோவில் தென்றல் நகரில் வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.;
காளையார்கோவில்,
காளையார்கோவில் தென்றல் நகரில் அரசு நிலத்தில் ஒரு பிரிவினர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டியிருந்தனர். இதுகுறித்து மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி அந்த ஆக்கிரமிப்பு கட்டிடம் வருவாய்த்துறையினரால் அகற்றப்பட்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் கலைந்துச் சென்றனர்.
இந்தநிலையில் நேற்று தென்றல் நகரை சேர்ந்த பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உறுப்பினர்கள் தலைமையில் தென்றல் நகர் வழியாக அய்யனார் கோவில் கண்மாய்க்கு செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஊர்வலமாக வந்து தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் சந்தானலட்சுமி மற்றும் காளையார்கோவில் போலீசார் முற்றுகையிட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு இடத்தில் கட்டிடம் இருந்ததால் அது கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டது. அந்த கட்டிடம் அய்யனார் கோவில் கண்மாய்க்கு செல்லும் வரத்துக்கால்வாய் ஓரத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதால் அகற்றப்பட்டது. இதேபோல் அந்த வரத்துக்கால்வாயில் உள்ள மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறினர். இதனையடுத்து ஒருவாரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.