ஓட்டப்பிடாரத்தில் ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது

ஓட்டப்பிடாரம் அருகே, ஆடு திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-12-18 22:24 GMT

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் அருகே தெற்கு ஆவாரங்காடை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 50). இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவருடைய ஆட்டு தொழுவத்தில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு சென்றார். அப்போது அங்கு 2 வாலிபர்கள் ஒரு ஆட்டை திருடி கொண்டு, மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து அவர், ஓட்டப்பிடாரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இதற்கிடையே குறுக்குசாலை பகுதியில் ரோந்து பணியில் இருந்த ஓட்டப்பிடாரம் போலீசார், அங்கு மோட்டார் சைக்கிளில் சென்ற அந்த 2 வாலிபர்களையும் பிடித்து விசாரித்தார். விசாரணையில், அவர்கள் புதியம்புத்தூர் மேலமடத்தை சேர்ந்த சிவராஜ் மகன் தர்மராஜ் (19), புதியம்புத்தூர் கீழத்தெருவை சேர்ந்த ராஜ்குட்டி மகன் முரளி (23) என்பதும், அவர்கள் ஆட்டை திருடி வந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் புதியம்புத்தூர், ராஜாவின்கோவில், சாமிநத்தம், சில்லாநத்தம், புதூர், எஸ்.கைலாசபுரம, குலசேகரநல்லூர், தட்டப்பாறை, மடத்தூர் மற்றும் பல இடங்களில் ஆடுகள் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்