கலெக்டர் அலுவலகத்தை தாழையூத்து கிராம மக்கள் முற்றுகை
குடியிருப்புக்குள் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை தாழையூத்து கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதனால் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் சங்கரலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடக்கு தாழையூத்து கிராமம் வழியாக புறவழிச்சாலை அமைப்பதால் பல வீடுகள், குடியிருப்புகளை இடிக்கும் சூழ்நிலை ஏற்படும் என்று கூறி வடக்கு தாழையூத்து கிராம மக்கள் பெட்டி, படுக்கைகளுடன் வேன்களில் நெல்லைக்கு வந்தனர். அவர்கள் எம்.ஜி.ஆர். சிலை அருகில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க ஊர்வலமாக வந்தனர். இவர்களை கலெக்டர் அலுவலகத்தின் முன்பு நின்ற போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, உதயசூரியன், காளியப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் 7 பேர் மட்டும் உள்ளே சென்று கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், மானூர் யூனியன் தாழையூத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட வடக்கு தாழையூத்தில் 800–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 4 ஆயிரத்துக்கும் அதிகமாக மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் மதுரை–கன்னியாகுமரி செல்லும் 4 வழிச்சாலையில் இருந்து புதிய இணைப்பு புறவழிச்சாலை இந்த கிராமத்தின் வழியாக அமைக்கப்படுவதாகவும், இதற்காக அந்த கிராமத்தில் உள்ள குடியிருப்புகளை காலி செய்யப்போவதாகவும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இந்த இடத்தை சர்வே செய்யப்போவதாகவும் கடந்த 14–ந்தேதி சில அதிகாரிகள் வந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த சாலை அமைக்கப்படுவதால் எங்களது வீடுகளை இழக்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே இந்த வழியாக புறவழிச்சாலை அமைப்பதை நிறுத்திவிட்டு ஏற்கனவே சாலை அமைக்க முடிவு செய்த இடத்தில் சாலை அமைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சியினரும், ஸ்ரீநகர் பகுதி மக்கள் முகமது ஹனிபா என்பவர் தலைமையிலும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக இளைஞர் அணி செயலாளர் கார்த்திக்பாண்டியன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நெல்லை மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மருத்துவ செலவு வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.
தென்காசியில் இருந்து நெல்லைக்கு வரும் பஸ்களை நயினார்குளம் ரோட்டில் பழைய ராயல் தியேட்டர் அருகில் நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நெல்லை டவுன் வடக்கு ரதவீதி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
நெல்லை சந்திப்பு கணேசபுரத்தை சேர்ந்த சாமிநாதன் மனைவி மாரியம்மாள் தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, தங்களிடம் கந்துவட்டி கேட்டு தொந்தரவு செய்து கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தார்.
சாம்பவர்வடகரை கீழுரை சேர்ந்த மரியசூசை யோகராஜ் என்பவருடைய மனைவி ஞானதீபம் தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, கணவர் வாங்கிய கடனுக்காக வீட்டை காலி செய்ய சொல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர். மேலும் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை கேட்டு ஏராளமானவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.