குஜராத், இமாசலபிரதேச பா.ஜனதா வெற்றி: கர்நாடக சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் எடியூரப்பா நம்பிக்கை

குஜராத், இமாசலபிரதேச மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு கிடைத்துள்ள வெற்றி கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று எடியூரப்பா கூறினார்.

Update: 2017-12-18 23:15 GMT
பெங்களூரு,

குஜராத், இமாசலபிரதேச மாநிலங்களில் பா.ஜனதா பெற்ற வெற்றி குறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜனதா செல்வாக்கு குறையவில்லை

குஜராத்தில் மாநில அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை கடுமையாக இருந்தது. இத்தகைய சூழ்நிலையிலும் அங்கு பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது. அங்கு தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகும் மக்கள் மீண்டும் ஆதரவு வழங்கி இருக்கிறார்கள். குஜராத் அரசு அங்கு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டது. 6-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது சாதாரண விஷயம் அல்ல.

மோடி முதல்-மந்திரியாக இருந்தபோது சிறப்பாக பணியாற்றினார். அவர் பிரதமராக சென்ற பிறகும், அவருடைய வழிகாட்டுதலில் குஜராத் அரசு அவர் விட்டுச் சென்ற பணிகளை அமல்படுத்தியது. அதனால் பா.ஜனதாவின் செல்வாக்கு அங்கு குறையவில்லை. அதேபோல் மோடி அரசின் வளர்ச்சியை பார்த்து இமாசலபிரதேசத்திலும் பா.ஜனதாவை மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். இதற்காக குஜராத் மற்றும் இமாசலபிரதேச மக்களுக்கு எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்.

பெரிய அளவில் எதிரொலிக்கும்

பிரதமர் மோடி மற்றும் எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மோடி, அமித்ஷா தலைமைக்கு மக்களின் ஆதரவு உள்ளது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. குஜராத், இமாசலபிரதேச மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு கிடைத்த வெற்றி கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரிய அளவில் எதிரொலிக்கும்.

கர்நாடகத்தில் சித்தராமையாவின் மோசமான ஆட்சி நிர்வாகத்தால் காங்கிரசில் சில எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி அடைந்து, பா.ஜனதாவில் சேர விருப்பம் தெரிவித்து உள்ளனர். ஜனவரி மாதத்திற்கு பிறகு அவர்களின் பெயர்களை பகிரங்கப்படுத்துவேன். கர்நாடகத்திலும் மோடி, அமித்ஷா தலைமையை மக்கள் ஆதரிப்பார்கள். அதன் மூலம் கர்நாடகத்திலும் பா.ஜனதா ஆட்சி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

அரசியல் தந்திரங்களை...

நாங்கள் அரசியல் தந்திரங்களை வகுத்து ஆட்சியை பிடிப்போம். மற்ற கட்சிகள் என்ன குறை சொன்னாலும் அதுபற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம். நாடு முழுவதும் மோடி அலை இன்னும் வீசுகிறது. மோடி அலை இல்லை என்று சொன்னால் இந்த மாநிலங்களில் வெற்றி பெற்று இருக்க முடியுமா?.

கர்நாடகத்தில் ‘மிஷன்-150’, அதாவது 150 தொகுதிகளில் வெற்றி பெற்று சொந்த பலத்தில் ஆட்சி அமைப்போம். காங்கிரஸ் இல்லாத கர்நாடகத்தை உருவாக்குவோம். இதற்காக எங்கள் கட்சி தலைவர்கள் அனைவரும் இணைந்து தீவிரமாக பாடுபட்டு வருகிறோம். இதற்கு அரசியல் தந்திரங்களையும் வகுத்து செயல்பட்டு வருகிறோம். எங்கள் கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார். 

மேலும் செய்திகள்