போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டைகள் பெற்ற வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேர் கைது உதவி செய்தவரும் சிக்கினார்
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டைகள் பெற்ற வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
பெங்களூரு,
பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் போலியான ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டைகள் பெற்று இருப்பதாக ஆதார் அட்டைகள் வினியோகிக்கும் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து பெல்லந்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு வந்து தங்கி தனியார் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் துப்புரவு தொழிலாளிகளாக வேலை செய்த வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவர்களின் பெயர்கள் ருபிஉல்லா (வயது 23), ரியாத் கான் (25), முகமது கோகான் (20), ஒகிதுல்லா (29), முகமது கலாம் (34), ஜாகீர் உசேன் (28) என்பது தெரியவந்தது. இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
உதவி செய்தவரும் சிக்கினார்
விசாரணையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு வந்த இவர்கள் இப்லூர் மற்றும் மாரத்தஹள்ளி பகுதிகளில் தங்கி கூலி வேலை செய்து வந்தது தெரியவந்தது. சம்பளம் போதாமல் இருந்ததால், ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனங்களில் துப்புரவு தொழிலாளியாக பணி செய்ய அவர்கள் விரும்பியுள்ளனர். அப்போது, அந்த நிறுவனங்களில் வேலை செய்ய அவர்களுக்கு ஆதார் அட்டைகள் தேவைப்படுவது தெரியவந்தது.
இதனால், அவர்கள் போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டைகள் பெற முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் பி.டி.எம். லே-அவுட் என்.எஸ். பாளையாவில் வசித்து வரும் சையத் சைபுல்லா என்பவரிடம் உதவி கேட்டுள்ளனர். அவரும் உதவி செய்வதாக கூறியுள்ளார். பின்னர், சையத் சைபுல்லா அவர்கள் 6 பேரிடமும் தலா ரூ.500 வாங்கி கொண்டு போலி ஆவணங்கள் மூலம் அவர்களுக்கு ஆதார் அட்டைகள் பெற்று கொடுத்தது தெரியவந்தது. இதனால் சையத் சைபுல்லாவும் போலீசாரிடம் சிக்கினார். அவரும் கைது செய்யப்பட்டார்.
டாக்டர் மீது வழக்குப்பதிவு
இவரிடம் நடத்திய விசாரணையில், வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேரும் ஆதார் அட்டைகள் பெறுவதற்கான இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட போலி ஆவணங்களில் பொம்மசந்திராவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் டாக்டர் லோகேஷ் கையெழுத்து மற்றும் முத்திரைகள் இட்டு உதவியது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர் லோகேஷ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர்.
கைதான சையத் சைபுல்லாவிடம் விசாரித்தபோது அவர் போலி ஆவணங்கள் மூலம் 50 பேருக்கு ஆதார் அட்டைகள் பெற்று கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து, பெல்லந்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.