“உயர் கல்வித்துறையில் இந்தியா முன்னோடி நாடாக திகழ்கிறது” கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

“உயர் கல்வித்துறையில் இந்தியா முன்னோடி நாடாக திகழ்கிறது” என்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய சமூக அறிவியல் மாநாட்டில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.;

Update:2017-12-19 04:30 IST
சேலம்,

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 41-வது இந்திய சமூக அறிவியல் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் இருந்து எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை 5.30 மணிக்கு வந்தார். அவரை கலெக்டர் ரோகிணி வரவேற்றார். பின்னர், கவர்னர் அஸ்தம்பட்டி அரசினர் ஆய்வு மாளிகைக்கு சென்று ஓய்வெடுத்தார்.

இதையடுத்து காலை 10 மணிக்கு பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய சமூக அறிவியல் மாநாட்டை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

உயர் கல்வித்துறையில் கல்வி திறன் மட்டுமின்றி திறமை, மனித ஆற்றல், பொருளாதாரம், வளர்ச்சி, கலாசாரம் போன்றவையும் கற்றுத்தரப்படுகிறது. இந்தியாவில் மிகப் பழமைவாய்ந்த நாளந்தா, தக்‌ஷசீலா உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் இருந்தன. தற்போது அவை அழிந்துவிட்டன. இங்கிலாந்து நாட்டில் அதிகப்படியான மக்கள், திறமை இருந்தும் அவர்களால் கல்வி கொள்கையை எட்டிப்பிடிக்க முடியவில்லை. அதேவேளையில், உயர்கல்வி கொள்கையில் இந்தியா சிறந்து விளங்குவதோடு, முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

அதாவது, சுதந்திரத்திற்கு பின்பு உலக அளவில் உயர்கல்வித்துறையில் இந்தியா முன்னோடி நாடாக திகழ்கிறது. வருங்காலங்களில் உயர்கல்வியில் நிறைய முன்னேற்றம் மற்றும் மாற்றங்களை கொண்டு வரவேண்டும். அதற்கு புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது. அவற்றை நிறைவேற்றி தந்தால்தான் எதிர்காலத்தில் போட்டிகளையும், சவால்களையும் சந்திக்க உதவியாக இருக்கும்.

நமது நாட்டு இளைஞர்களுக்கு வறுமை ஒழிப்பு குறித்தும், ஜனநாயக விரோத செயல்களை தடுப்பது குறித்தும், சமூகநீதி, கருத்து சுதந்திரம் குறித்தும் எடுத்துரைக்க வேண்டும். ஆராய்ச்சி, மனிதவளம் இருக்கும் வகையில் மேலும் நவீன வசதிகளுடன் கல்வி நிலையங்களை உருவாக்கும் நேரம் வந்துவிட்டது.

எதிர்கால சவால்களை சமாளிக்கக்கூடிய வகையிலும், எல்லோருக்கும் வாய்ப்பளிக்கும் வகையிலும் அது உதவியாக இருக்க வேண்டும். பொருளாதார முன்னேற்றம், உலக மயமாக்கல் ஆகியவற்றை எடுத்து செல்லும் வகையில் கல்வி இருக்க வேண்டும். இந்தியாவில் 800 பல்கலைக்கழகங்களும், 40 ஆயிரம் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் 3.4 கோடி மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். பெரியார் பல்கலைக்கழகம் நமது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் 85-வது இடத்தில் உள்ளது. இது பெருமைப்பட வேண்டிய விஷயம் ஆகும்.

மனிதவள அமைச்சகம் மேற்கொண்ட 100 பல்கலை, கல்லூரி தரவரிசையில் 24 பல்கலைக்கழகம், 37 கல்லூரிகளில் தமிழகமே முன்னோடியாக உள்ளது. இந்தியாவில் 24.3 சதவீதம் பேர் உயர்கல்வி படிக்கிறார்கள் என்றால், தமிழகத்தில் அது 44.3 சதவீதம் என்ற வகையில் உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உயர் கல்வித்துறையை 5 முக்கிய காரணியாக பிரித்துள்ளது. பல்கலை, கல்லூரி என தரவரிசையை உருவாக்கியுள்ளது.

இதில் உயர் கல்வியில் சிறந்து விளங்கும் 10 அரசு பல்கலைக்கழகங்கள், 10 தனியார் பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுத்து அவற்றின் கல்வி மேம்பாட்டிற்காக ரூ.1,000 கோடி நிதி வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. இன்றைய சூழலில் உலகத்தரமான கல்வி அவசியம். நல்ல உயர்கல்வி இருந்தால் தான் எந்த நாட்டிலும் மனிதவள மேம்பாடு நன்றாக இருக்கும். மனிதவள மேம்பாடு இருந்தால் தான் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். உலக அளவில் பல முன்னேற்றங்களை சாதிக்கலாம். .

இவ்வாறு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

முன்னதாக இந்திய சமூக அறிவியல் அகாடமி தலைவர் கே.எஸ்.சர்மா தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால் வரவேற்றார். சமூக அறிவியல் அகாடமி பொதுச்செயலாளர் சவுபே, பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மணிவண்ணன், கலெக்டர் ரோகிணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், சமூக அறிவியல் மாநாட்டின் மலரை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார். மாநாட்டில் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்