மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து மோதல்; வாலிபர் பலி 4 பேர் படுகாயம்

ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2017-12-18 23:00 GMT
ஆரல்வாய்மொழி,

ராமநாதபுரம், கடலாடி வாலிநோக்கம் பகுதியை சேர்ந்தவர் ரகுமான்கான் (வயது 21). இவர் நாகர்கோவில் இடலாக்குடியில் முகமது அத்திக் (32) என்பவரின் பேக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரகுமான்கான் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றார்.

நேற்றுமுன்தினம் முகமது அத்திக், ராமநாதபுரம் சென்று ரகுமான்கானை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து கொண்டிருந்தார்.

விபத்து

இவர்கள் ஆரல்வாய்மொழியை கடந்து தோவாளை பெரியகுளத்து பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பின்னால் கேரளாவை சேர்ந்த சில வாலிபர்கள் மோட்டார் சைக்கிள்களில் வந்து கொண்டிருந்தனர்.

அவர்களில் திருவனந்தபுரம், பள்ளிபுரத்தை சேர்ந்த முகமது கான் (21) ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் முகமது அத்திக் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தன. இதையடுத்து பின்னால் வந்து கொண்டிருந்த வேறு சில மோட்டார் சைக்கிள்களும் நிலைதடுமாறி மோதி விபத்துக்குள்ளானது.

வாலிபர் பலி

மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் ரகுமான்கான், முகமது அத்திக், திருவனந்தபுரத்தை சேர்ந்த முகமதுகான், அவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த ராசிக் (19) மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆசிக்முகமது (22) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

உடனே, அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் ரகுமான்கான் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்