திடீரென திறந்ததால் பரிதாபம் ஆம்னிபஸ்சின் கதவு மோதி மூதாட்டி படுகாயம்

அய்யம்பேட்டை அருகே ஆம்னி பஸ்சின் கதவு திடீரென திறந்து மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.;

Update: 2017-12-18 22:15 GMT
அய்யம்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள பசுபதிகோவில் கபிரியேல்புரத்தை சேர்ந்தவர் இன்னாசிபிள்ளை. இவருடைய மனைவி ரெஜினாமேரி (வயது 65). சம்பவத்தன்று இவர் தனது மகன் புஷ்பராஜுடன் பசுபதிகோவில் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி ஒரு ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் ரெஜினாமேரி அருகே வந்ததும் பஸ்சின் பக்கவாட்டில் பயணிகளின் உடைமைகளை வைக்கும் பகுதியின் கதவு திடீரென திறந்து அவர் மீது மோதியது. இதில் அந்த கதவில் இருந்த கம்பி ரெஜினாமேரியின் விலா பகுதியில் ஆழமாக கிழித்தது.

தீவிர சிகிச்சை

ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவரை, ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்