படப்பையில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தந்தை–மகன் பலி

படப்பையில் சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தந்தை–மகன் பரிதாபமாக இறந்தனர். மனைவி மற்றும் மற்றொரு மகன் படுகாயம் அடைந்தனர். தனியார் பள்ளியில் வேலை சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் அருண்(வயது 35). இவர், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ

Update: 2017-12-18 22:45 GMT

வண்டலூர்,

படப்பையில் சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தந்தை–மகன் பரிதாபமாக இறந்தனர். மனைவி மற்றும் மற்றொரு மகன் படுகாயம் அடைந்தனர்.

சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் அருண்(வயது 35). இவர், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பஸ்களை பராமரிக்கும் பிரிவில் மேலாளராக பணியாற்றி வந்தார். இதற்காக அருண், கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வாடகை வீடு பார்த்து தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் வார விடுமுறையை முன்னிட்டு நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான சென்னை பெரவள்ளூர் சென்ற அருண், அங்கிருந்து நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் மனைவி ஜாஸ்மின், மகன்கள் ஜோயல் ஆண்ட்ரு(4), ஆல்பர்ட்ஜாக்(2) ஆகியோருடன் வண்டலூர்–வாலாஜாபாத் சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது படப்பை பகுதியில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அருண், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து தனது மனைவி கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

காயம் அடைந்த அவருடைய மகன் ஆல்பர்ட்ஜாக்கை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை ஆல்பர்ட் ஜாக் பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அருணின் மனைவி ஜாஸ்மின், குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், மற்றொரு மகன் ஜோயல் ஆண்ட்ரு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்