நீலகிரியில் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் வேலைநிறுத்தம் பயணிகள் அவதி

கால்டாக்சிகளை இயக்க அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-18 22:30 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கால்டாக்சிகளை இயக்க தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன. இதனால் சுற்றுலா வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெருநிறுவனங்களுக்கு சொந்தமான கால்டாக்சிகளை இயக்க அனுமதிக்கக்கூடாது என்பது உள்பட 8 கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாவட்டம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்றது.

வேலைநிறுத்தம் காரணமாக ஊட்டியில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடங்களான சேரிங்கிராஸ், ஏ.டி.சி., ராஜீவ்காந்தி ரவுண்டானா உள்பட பல்வேறு இடங்களில் வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் வாகனங்களை ஓட்டுனர்கள் இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டு இருந்தது. இதனால் ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க செல்ல கார், வேன் போன்ற வாகனங்கள் கிடைக்காமல் அவதி அடைந்தனர்.

இதனிடையே வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 8 கோரிக்கைகளை வலியுறுத்தி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கோவர்த்தன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் 500–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கோவர்த்தன் கூறியதாவது:–

நீலகிரி மாவட்டத்தில் தொழில்துறை நிறுவனங்கள் எதுவும் இல்லை. சுற்றுலா தொழிலேயே பெரிதும் நம்பி வாகனங்களை இயக்கி வருகிறோம். நீலகிரியில் கால்டாக்சிகளை இயக்கினால், சுற்றுலா வாகனங்களின் பயன்பாடு குறைந்து விடும். ஆகவே, கால்டாக்சிகளை இயக்க அனுமதிக்கக்கூடாது. சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் காப்பீட்டு வரி, சாலை வரி உள்ளிட்டவற்றை அரசுக்கு தவறாமல் செலுத்தி வருகிறோம். அப்படி இருக்கும் போது, தனியார் வாகனங்களில் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்பவர்கள் மீது புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை.

நீலகிரி முழுவதும் உள்ளூரில் உள்ள சுற்றுலா வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லை. எனவே, வாகனங்களை நிறுத்த மேலும் பல இடங்களை தேர்வு செய்து கொடுக்க வேண்டும். மேக்சிகேப் வாகனங்களுக்கு போலீசார் அடிக்கடி அபராதம் விதித்து வருகின்றனர். இதனால் மேக்சிகேப் வாகனங்களை இயக்கவே ஓட்டுனர்கள் பயப்படுகின்றனர். மேக்சிகேப் வாகனங்களில் இருக்கைகளை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

போக்குவரத்து நெரிசலை காரணமாக வைத்து, தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு மேக்சிகேப் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. ஆகவே, உள்ளூர் மேக்சிகேப் வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். கல்லட்டி மலைப்பாதையை தவிர, பிற பகுதிகளில் சமன் சாலையாக உள்ள இடங்களில் வாகனத்தின் வேகத்தை சற்று அதிகரித்து இயக்க அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்