அரசு மருத்துவமனை டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
பொன்னேரி அரசு மருத்துவமனை டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வருபவர் ராஜ்கணேஷ் (வயது 45). இவர் கடந்த சனிக்கிழமை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் வந்து மருந்து கேட்டார்.
டாக்டர் அந்த நபரிடம் நோயாளிகள் அனைவரும் வரிசையில் வந்து கொண்டிருக்கின்றனர், நீங்களும் வரிசையில் வாருங்கள் என்றார். அப்போது அந்த நபர் டாக்டரை சாதி பெயரை கூறியும், தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி அனுராதாவிடம் ராஜ்கணேஷ் புகார் செய்தார்.
அவர் திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் தயாளனுக்கு துறைரீதியான நடவடிக்கைக்கு அனுப்பினார். பொன்னேரி போலீசாருக்கு இணை இயக்குநர் நடவடிக்கை எடுக்கும்படி கடிதம் அனுப்பினார். இதைத்தொடர்ந்து டாக்டர் ராஜ்கணேஷ் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் பொன்னேரியை சேர்ந்த கலைச்செல்வன் என்பது தெரியவந்தது. அவர் மீது வன்கொடுமை தடை சட்டம் உள்பட 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து, பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.