விபத்தில் காயமடைந்த என்ஜினீயருக்கு இழப்பீடு வழங்காததால் போக்குவரத்து கழக அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவு

விபத்தில் படுகாயம் அடைந்த என்ஜினீயருக்கு இழப்பீடு வழங்காததால் போக்குவரத்து கழக அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2017-12-18 22:00 GMT

பழனி,

பழனியில், விபத்தில் படுகாயம் அடைந்த என்ஜினீயருக்கு இழப்பீடு வழங்காததால் போக்குவரத்து கழக அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஜப்தி செய்ய சென்ற கோர்ட்டு ஊழியர்களை போக்குவரத்து கழக அலுவலர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நீலமலைக்கோட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகன் முனிராஜ் (வயது 26). என்ஜினீயர். கடந்த 2006–ம் ஆண்டு, திண்டுக்கல்லில் இருந்து நீலமலைக்கோட்டைக்கு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். மூலச்சத்திரம் அருகே வந்த போது, எதிரே வந்த மற்றொரு அரசு பஸ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முனிராஜ், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் உயிர்பிழைத்தார். ஆனால் அவருக்கு நினைவு திரும்பவில்லை. இதையடுத்து முனிராஜின் குடும்பத்தினர், அரசு போக்குவரத்து கழகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பழனி சப்–கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். விசாரணையின் முடிவில், ரூ.20 லட்சத்து 58 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கும்படி கடந்த 2011–ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் அவருக்கு இழப்பீடு வழங்காததால், பழனி கோர்ட்டில் முனிராஜின் குடும்பத்தினர் 2015–ம் ஆண்டு நிறைவேற்றல் மனு தாக்கல் செய்தனர். அதில் வட்டியுடன் சேர்த்து ரூ.30 லட்சத்து 32 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கவேண்டும். அவ்வாறு வழங்கவில்லையென்றால் அரசு போக்குவரத்து கழக அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால் கோர்ட்டு ஊழியர்களை, அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய விடாமல் போக்குவரத்து கழக ஊழியர்கள் தடுத்தனர். அதையடுத்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.3 லட்சத்துக்கான காசோலை முனிராஜின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் பல மாதங்கள் ஆகியும் மீதித்தொகை வழங்கவில்லை.

அதைத்தொடர்ந்து முனிராஜின் குடும்பத்தினர் பழனி கோர்ட்டில் மீண்டும் நிறைவேற்றல் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து மீண்டும் அரசு போக்குவரத்து கழக அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் முனிராஜின் குடும்பத்தினர் ஆகியோர் நேற்று பழனி அரசு போக்குவரத்து கழக அலுவலகத்துக்கு சென்றனர்.

அங்கு அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய முயன்றனர். அப்போது அவர்களுடன் போக்குவரத்து கழக ஊழியர்கள் வாக்குவாதம் செய்தனர். பின்னர் மண்டல துணை மேலாளர் கணேசன், கோர்ட்டு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்து, கொண்டு செல்ல முயன்றனர். அதற்குள் அலுவலக நுழைவுவாயில் கேட்டை காவலாளி பூட்டு போட்டு பூட்டினார். மேலும் ஜப்தி செய்த பொருட்களை கொண்டு செல்வதற்காக வந்த வாகனத்தையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

இதற்கிடையே ஜப்தி செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் அலுவலகத்துக்குள் போக்குவரத்து ஊழியர்கள் எடுத்துச்சென்றனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் வந்து பொருட்களை ஜப்தி செய்வோம் என்று கோர்ட்டு ஊழியர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஜப்தி நடவடிக்கை குறித்து தகவலறிந்த பத்திரிகையாளர்கள், அரசு போக்குவரத்து கழக அலுவலகத்துக்கு சென்றபோது அவர்களை காவலாளி உள்ளே செல்ல அனுமதிக்காமல் வாக்குவாதம் செய்தார். மேலும் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளராகவே இருந்தாலும் நான் அனுமதித்தால் தான் உள்ளே செல்ல முடியும். எனவே உங்களை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். இதனால் பத்திரிகையாளர்களுக்கும் காவலாளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்து கழக அதிகாரிகள் பேசியதை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்